இந்த 4 சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் வசூல் பண்ணவே கூடாது.. அமைச்சர் எ.வ.வேலு பரபர பேட்டி!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டதாகவும், காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். காலாவதியான சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்குச் சென்று பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு இடையே உள்ள கடல் நடுவே கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணி ரூ.37 கோடியில் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு: அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள கடல் பரப்பின் இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி எதிர் வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் பணிகள் முடிந்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மார்த்தாண்டம் பாலம்: தொடர்ந்து, மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக புதிதாக சாலைகள் அமைப்பது பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம். மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலைகளை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
காலாவதியான 30 சுங்கச்சாவடிகள்.. கோர்ட்டுக்கு போகலாமே.. அமைச்சருக்கு நெட்டிசன் கேள்வி
அதன் ஒரு பகுதியாக, மார்த்தாண்டம் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் 2.4 கி.மீ நீளத்திற்கு ரூ.320 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் பாலத்தின் தூண்கள் 101-ற்கும் 102-க்கும் இடையில் உள்ள பாலத்தின் ஓடு தளத்தில் கம்பி தெரியும் அளவுக்கு பழுது ஏற்பட்டது. இதனை சரி செய்ய நுண் நுட்ப கான்கீரிட் மூலம் தார் சாலை போடப்பட்டது எனத் தெரிவித்தார்.
4 சுங்கச்சாவடிகளில்: நெல்லை மாவட்டம் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டன. காலாவதியான சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணம் வசூலிக்கக்கூடாது. பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் 4 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம்.
தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் காலாவதியான பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications