சதமடித்த தக்காளி விலை எப்போது குறையும்?.. முதல்வர் உத்தரவு.. பெரியகருப்பன் சொன்னது இதுதான்
சென்னை: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை சார்பில் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் இன்று முதல் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் தக்காளி விலை விரைவில் குறையத்தொடங்கும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. தமிழக மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கனிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு 800 டன் வரையிலான வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளது.

இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், திருச்சியில் செயல்பட்டு வரும் 13 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 1 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை, மதுரையில் செயல்பட்டு வரும் 4 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்.
மேலும் தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வீதம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.68 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவானதாகும். மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விலையேற்றம் தற்காலிகமானதே விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகளை வாங்கிப் பயன்பெறுமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இன்று தேனாம்பேட்டை பசுமை பண்ணை கடையில் தக்காளி விற்பனையை ஆய்வு செய்த அமைச்சர் பெரியகருப்பன், அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications