"பிரிச்சி எடு".. ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு! அதென்ன கனடா மஞ்சள்? தமிழக அரசுக்கு கோரிக்கை
சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு குறித்த, முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அத்துடன் தமிழக அரசுக்கும் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், 1 கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.. இதை வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறது.

இந்த துவரம் பருப்பு விலையை விட, கனடா மஞ்சள் பருப்பு, 40 ரூபாய் வரை விலை குறைவாக உள்ளதால், பல வருடங்களாகவே கனடா மஞ்சள் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது..
கனடா: இந்த பருப்பு இங்கு கிடைக்காததால், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஜனவரியில் கிலோ, 129.65 ரூபாய் விலையில், 45,000 டன் கனடா மஞ்சள் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது. பிறகு, கடந்த மார்ச்சில், 60,000 டன் கனடா மஞ்சள் பருப்பு அல்லது துவரம் பருப்பு வாங்க டெண்டர் கோரப்பட்டது.
அதாவது, தரமான துவரம் பருப்பு என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.. ஆனால், மஞ்சள் பருப்பு என்பது 90 முதல் 95 கிலோ பருப்பினை கலவை இயந்திரத்தில் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 100 கிலோ பருப்பாக மாற்றப்படுகிறது... சில நேரங்களில் செயற்கை நிறம் சேர்க்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.. அதனால்தான், இந்த பருப்பு விநியோகத்திற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
துவரம் பருப்பு: "மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், அரசுக்கு ஏற்படும் இழப்பினைக் கருத்தில் கொண்டும், வெளிப்படையான முறையில், குறைந்த விலையில், தரமான துவரம் பருப்பினை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற மஞ்சள் பருப்பினை வாங்கி வழங்கும் முயற்சியினை கைவிட வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
கனடா பருப்பின் இப்போதைய சந்தை விலை, 120 ரூபாய் - 130 ரூபாய். துவரம் பருப்பு கிலோ, 160 முதல், 165 ரூபாய்க்கு கிடைக்கிறது.. அதாவது, துவரம் பருப்புடன் ஒப்பிடும் போது, கனடா மஞ்சள் பருப்பு விலை குறைவாக இருப்பதை தெரிவித்து, தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களிடம் இருந்து, அந்த பருப்பை வாங்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
முயற்சிகள்: இதற்காக, கண்துடைப்பிற்காக பேச்சுவார்த்தை நடத்தி, கனடா பருப்புக்கு, கிலோவுக்கு 1 ரூபாய், 2 ரூபாய் குறைப்பதற்கான முயற்சிகள் நடக்கிறதாம்.. இதனால், அரசுக்கு கிலோவுக்கு, 30 ரூபாய் என, வைத்து கொண்டால் கூட, 20,000 டன்னுக்கு, 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்கிறார்கள்.
எனவே, இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து, தீவிர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாணிப கழகத்திலிருந்தே கோரிக்கை எழுந்துள்ளதாம்.
பேச்சுவார்த்தை: இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகத்தில் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களுடன் விலை குறைப்பு பேச்சுவார்த்தையும் இன்று நடப்பதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications