6 பேர்கள்.. வேலுமணி என்றதும்.. வரிந்துகட்டிக்கொண்டு வந்த டாப் தலைகள்! வீட்டின் முன் நடந்தது என்ன?
சென்னை: எஸ்பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில் அதிமுகவின் டாப் தலைகள், முன்னாள் அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக குதித்துள்ளனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் மீண்டும் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. காலை 6 மணிக்கு ரெய்டு தொடங்கிய நிலையில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் மொத்தம் 8 இடங்களில் ரெய்டு நடக்கிறது.

வேலுமணி
இந்த ரெய்டை தொடர்ந்து அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து 11.53 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி மற்றும் கணக்கில் வராத 84 லட்ச ரூபாய் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு இவர் கிரிப்டோ கரன்சியில் 34 லட்ச ரூபாய்க்கு முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு ஹார்ட் டிஸ்க், லாக்கர் சாவி, ஆவணங்கள் ஆகியவையும் இவரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டாப் தலைகள்
இந்த ரெய்டை அடுத்து மொத்தமாக அதிமுகவின் டாப் தலைகள் அவரின் வீடு முன் கூடினார்கள். இதற்கு முன் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவருக்கு அதிமுக நிர்வாகிகள் பெரிய அளவில் ஆதரவு கொடுக்கவில்லை என்று அதிமுகவில் பேச்சுக்கள் எழுந்தன. அதேபோல் ஜெயக்குமார் கைதின் போதும் எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கே பி அன்பழகன் வீட்டில் ரெய்டு நடைபெற்ற போதும் அவர்களுக்கு பெரிய அளவில் அதிமுக தலைகள் ஆதரவு கொடுக்கவில்லை என்று அதிருப்திகள் எழுந்தன.

தலைமை அதிருப்தி
தலைமை எங்களை கண்டுகொள்ளவில்லை என்று நிர்வாகிகள் இடையே அதிருப்திகள் எழுந்தன. ஆனால் இன்று எஸ்பி வேலுமணி வீட்டில் ரெய்டு என்றதும் அதிமுகவின் டாப் தலைகள் அங்கு மொத்தமாக குவிந்தனர். மாலைக்குள் முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் வருகை எஸ்.பி வேலுமணி வீடு முன் குவிந்தனர். எஸ்.பி.வேலுமணியின் சுகுணாபுரம் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகை புரிந்தார், அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர், கருப்பண்ணன், தங்கமணி ஆகியோர் வருகை தந்தனர்.

எதிர்ப்பு
வேலுமணி வீட்டின் முன் கூடிய இவர்கள் அங்கு அதிமுக நிர்வாகிகளுடன் இணைந்து தமிழக அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினரை கண்டித்து தொடர் கண்டன முழக்கங்களை எழுப்பி வந்தனர். தமிழ்நாடு அரசு பழி வாங்கும் நடவடிக்கையாக இப்படி ரெய்டு நடத்துவதாகவும். முதல் ரெய்டில் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் தோல்வி அடைந்த விரக்தியில் மீண்டும் ரெய்டு நடத்துகிறார்கள் என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோஷம்
முன்னதாக இது பழி வாங்கும் நடவடிக்கை. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை வெளியிட்டனர். அதிமுகவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உட்கட்சி மோதல் நிலவுகிறது. நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது டாப் நிர்வாகிகள் எல்லாம் ஒற்றுமையாக வந்து வேலுமணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

6 பேர்கள்
நிர்வாகிகள் இடையே கடும் உட்கட்சி மோதல் இருக்கிறது. இதை பயன்படுத்தி சசிகலா உள்ளே வருவார் என்று கணிப்புகள் வெளியிட்ட நிலையில்தான் வேலுமணிக்கு ஆதரவாக இரட்டை தலைமை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. கொங்கு மண்டலத்திற்கும் ஓபிஎஸ்ஸுக்கு ஆகாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவரும் இந்த ரெய்டை கண்டித்து உள்ளார். வேலுமணிக்கு கிடைத்திருக்கும் இந்த பெரிய ஆதரவு அதிருப்தியாளர்கள், சசிகலா ஆகியோருக்கு எதிரான மெசேஜாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications