"உரிமை தொகை வரல!" லட்ச கணக்கில் குவிந்த மேல்முறையீடுகள்! எத்தனை தெரியுமா! கடைசி தேதி எப்போது
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்தது. அதில் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்பதாகும்.

இதற்குத் தேர்தல் சமயத்திலேயே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தலில் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், திமுக ஆட்சி அமைந்தது முதலே பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.
உரிமை தொகை: இதற்கிடையே கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர்கள் உடனான கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்த முக்கிய அம்சங்களை அறிவித்தார். கலைஞர் மகளிர் உரிமை தொகை என்று இந்தத் திட்டத்திற்குப் பெயர் வைக்கப்பட்ட நிலையில், இதற்காக ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் சில ஆவணங்கள் கேட்கப்பட்ட நிலையில், மொத்தம் 13 கேள்விகளும் அதில் இடம்பெற்றிருந்தது.
இதில் சுமார் 1.57 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தகுதி வாய்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி சுமார் 1.06 கோடி பேருக்கு இந்த மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. கடந்த மாதம் 15ஆம் தேதி இவர்களுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு விட்டது. இவர்கள் அனைவருக்கும் மாதாமாதம் 15ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: இதற்கிடையே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோர் தாங்கள் தகுதியுள்ளவர்கள் எனக் கருதினால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து தகுதி இருக்கும்பட்சத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
மகளிர் உரிமை தொகையைப் பொறுத்தவரை இப்போது 1.06 கோடி பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 15ஆம் தேதி உரிமை தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 லட்சம் பேர்: அதன்படி இதுவரை மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 55 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இவர்களின் விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் வரும் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், வரும் நாட்களில் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என்று தெரிகிறது.
இணையதளம்: முன்னதாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காகத் தனியாக இணையதளமும் தொடங்கப்பட்டது. http://kmut.tn.gov.in என்ற தளத்திற்குச் சென்று பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.. இதில் ஆதார் எண்ணைக் கொடுத்தால் ஒடிபி வரும்.. அதைப் பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.












Click it and Unblock the Notifications