பள்ளிக்கரணை வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி.. வேளச்சேரி-தாம்பரம் சாலையில் வந்தாச்சு மாற்றம்! நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை பள்ளிக்கரணை பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, வேளச்சேரி - தாம்பரம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி மெயின் சாலையில் பள்ளிக்கரணை ஆஸ்பத்திரி சிக்னல், கைவேலி சந்திப்பு, மயிலை பாலாஜி நகர் சிக்னல் ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பெருநகரமான சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. போக்குவரத்து போலீசாரும் வாகன ஓட்டிகளின் குறைகளை கேட்டறிந்து அதற்கேற்றவாறு வாகன நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தான் சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கோரிக்கையினை அடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, வேளச்சேரி-தாம்பரம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது தொடர்பாக வாகன ஓட்டிகள் போலீசாரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை கைவேலை மடிப்பாக்கம் மெயின் சாலை இணையும் பகுதியில் வாகனங்கள் திரும்பி, நின்று செல்வதற்காக சிக்னல் உள்ளது.
இந்த சிக்னலில் வாகனங்கள் காத்திருந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதேபோன்று அதன் அருகே மேலும் 3 சிக்னல்கள் அடுத்தடுத்து இருப்பதால், கூடுதல் நேரம் நின்று செல்லும் சூழல் உள்ளதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது என்றும் இதனால் விரைந்து செல்ல முடியவில்லை என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த சூழலில் தான் தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார், சென்னை பள்ளிக்கரணை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிரடி மாற்றங்களை செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, வேளச்சேரி மெயின் சாலையில் பள்ளிக்கரணை ஆஸ்பத்திரி சிக்னல், கைவேலி சந்திப்பு, மயிலை பாலாஜி நகர் சிக்னல் ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* வேளச்சேரி மெயின் சாலையில் உள்ள பள்ளிக்கரணை ஆஸ்பத்திரி சந்திப்பு முதல் வேளச்சேரி ரயில்வே பாலம் வரை நடுவே உள்ள மயிலை பாலாஜிநகர் சிக்னல் கைவேலி சந்திப்பு அடைக்கப்படுகிறது.
* இதன் காரணமாக தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் மயிலை பாலாஜிநகர் சிக்னல் சந்திப்பில் திரும்புவது தடுக்கப்பட்டுள்ளது.
* இப்படி தடுக்கப்படும் வாகனங்கள் இடதுபுறம் அனுப்பப்பட்டு 200 மீட்டர் தூரம் சென்ற பிறகு திரும்ப பாதை அமைக்கப்பட்டு இருக்கின்ற வழியில் மடிப்பாக்கம் செல்லலாம்.
* இதேபோல் மடிப்பாக்கம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கைவேலி சந்திப்பில் வலதுபுறம் திரும்புவது தடுக்கப்பட்டு இடதுபுறமாக திருப்பி விடப்படுகிறது.
* இப்படி செல்லும் போது வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் திரும்பி பள்ளிக்கரணை நோக்கி செல்லலாம்.
* மேற்கண்ட இந்த 2 சந்திப்பிலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications