முடிவிற்கு வந்த பெரும் சகாப்தம்! பாம்பன் தூக்கு பாலம் நிரந்தரமாக மூடப்பட்டது.. இனி ரயில் பயணம் இல்லை
சென்னை: ரயில் போக்குவரத்திற்கான பாம்பன் தூக்கு பாலம் நிரந்தரமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக பழைய பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பாம்பன் தீவில் உள்ள மண்டபம் நகரை ராமேஸ்வரத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் புதிய பாம்பன் ரயில்வே கடல் பாலம் நவம்பர் மாதத்திற்குள் தயாராகாது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த பாலம் அடுத்த வருடம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பாலம் 2019 முதல் கட்டப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை முதலில் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் அது ஜூலை வரை நீட்டிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் நவம்பர் மாதத்திற்குள் பணியை முடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பணிகள் இன்னும் முடியவில்லை. பாலத்தின் நீளத்தில் 99 கிடைமட்ட இடைவெளிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவை 18.3 மீட்டர் அகலம் மற்றும் 72.5 மீட்டர் நீளம் உள்ளன. 99 ஸ்பான்களில் 73 இடங்கள் போடப்பட்டுள்ளன. இந்த இடைவெளிகளில் தடங்களும் போடப்பட்டுள்ளன. மீதம் உள்ள இடங்களில் இன்னும் பணிகள் முடியவில்லை. இருப்பினும், சமீபத்திய நாட்களில், திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் காற்றின் வேகம் அதிகரித்து, உள்ளது. இதனால் முறையான வேகத்தில் வேலை செய்வது கடினம் ஆகிறது.
கட்டுமான பணிகள்; இதன் காரணமாகவே அங்கே பணிகளை மேற்கொள்வது கடினம் ஆகி உள்ளது. அதேபோல் வடகிழக்கு பருவமழை காரணமாக இங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் இங்கே பணிகளை செய்வது கடினம் ஆகி உள்ளது.
முந்தைய பாலம் போல இல்லாமல் இந்த பாலம் நடுவில் தூக்காது. மாறாக இது லிப்ட் போல இயங்கும். இதை "lift-span" என்று அழைப்பார்கள். இது 72.5 மீட்டர் தூரம் கொண்டது. பெரிய கப்பல்கள் செல்லும் வகையில் இந்த பாலம் திறக்கும். இந்த பாலம் அங்கே அமைக்கப்பட்டுவிட்டது. இதை செயல்படுத்தி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
2.05 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தை ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் ₹545 கோடி செலவில் கட்டுகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கப்படும். பாதுகாப்புக் காரணங்களுக்காக பழைய பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
நிரந்தரமாக நிறுத்தம்: ரயில் போக்குவரத்திற்கான பாம்பன் தூக்கு பாலம் நிரந்தரமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கே ஏற்கனவே பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காரணம் அருகில் இருக்கும் கட்டுமானத்திற்கு சிக்கல் வரக்கூடாது என்ற பாதுகாப்பு காரணத்திற்காக நிறுத்தப்பட்டது.
கடந்த 1913ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்த பாம்பன் தூக்கு பாலம் 109 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வந்தது. இடையில் அவ்வப்போது இது பழுது அடையும். ஆனாலும் தொடர்ந்து இயக்கப்படும். கடந்த 11 மாதங்களாக பழுது காரணமாக ரயில்கள் இங்கே அனுமதிக்கப்படவில்லை. தற்போது அருகில் கட்டுமானம் தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக பழைய பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மிகப்பெரிய சகாப்தம் அங்கே முடிவிற்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications