பெரிய திமிங்கலம் மாட்டுதோ? அசராத பாஜக.. "அவர்" இங்கே வர்றாரா.. அதெப்படி முடியும்? திகுதிகு திருச்சி
சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி முறிவுக்கு பிறகு பல்வேறு மாறுதல்கள், தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டு வருகின்றன.. அந்தவகையில், விலகல்களும் அதிகரிக்க துவங்கிவிட்டன.
பாஜகவை பொறுத்தவரை, இந்த முறை குறிப்பிட்ட வாக்கு வங்கியை பெற்றாக வேண்டிய முனைப்பில் உள்ளது.. அதிமுகவை இதுவரை சமாதானப்படுத்தாத நிலையில், தனித்து போட்டி என்ற முடிவையும் எடுத்துள்ளதாக தெரிகிறது.

அமமுக: தேமுதிக, பாமக, பாரிவேந்தர், ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி, ஓபிஎஸ், தமாகா, அமமுக என மொத்த பேரையும் இணைத்து களம் காணவும் முயன்றுவருவதாக தெரிகிறது. ஒருபக்கம் கட்சியை பலப்படுத்தி கொண்டே, மறுபக்கம், வலுவான கூட்டணிக்கு அடித்தளமிட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக பாஜகவின் பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் நேற்று முன்தினம் திடீரென கட்சியிலிருந்து விலகினார்.
தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சியின் முக்கியமான தலைவர் விலகியிருப்பது, பரபரப்பை தந்து வருகிறது. அதேசமயம், பாஜகவில் மேலும் சில புள்ளிகள் விரைவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் பரபரத்தபடியே வந்தன. அதன்படி, திருச்சி பாஜகவிலிருந்து விரைவில் குட்நியூஸ் ஒன்று வரப்போவதாக சொல்கிறார்கள்.
சாருபாலா: அமமுகவில் அமைப்பு செயலாளராக உள்ள திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது... திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான். தமாகா சார்பில் 2001, 2006ல் திருச்சி மேயராக இருந்தவர்.. காங்கிரஸ் சார்பில் 2009ல் திருச்சி எம்பி தேர்தலில் போட்டியிட்டு சறுக்கலை சந்தித்தவர்.
பிறகு, 2016ல் அதிமுகவில் இணைந்தார்... ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அமமுகவில் இணைந்தார்.. இப்போது அமமுகவில் அமைப்பு செயலாளராகவும் உள்ளார்.. கடந்த எம்பி தேர்தலில், இவருக்கு டிடிவி தினகரன் சீட் தந்திருந்தார். இதற்கு காரணம், இவரது மூதாதையர்கள் புதுக்கோட்டையில் மன்னராக இருந்ததாலும், சாருபாலாவுக்கு திருச்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாலும், இவருக்கு வாய்ப்பு தந்திருந்தார் தினகரன்.
வாண்டையர் சமூகம்: அது மட்டுமில்லை, வாண்டையர் சமூகத்தின் ஓட்டுக்கள் கணிசமாக இவருக்கு விழ வாய்ப்பிருப்பதாகவும் நம்பப்பட்டது.. மகளிருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காகவும் இவர் காங்கிரசில் இருந்ததில் இருந்தே தொகுதியை பற்றி நன்றாக தெரிந்தவர் என்பதாலும்தான் டிடிவி தினகரன், இவரை தேர்வு செய்ததாக சொன்னார்கள்..
ஆனாலும், தோல்வியை தழுவினார் சாருபாலா.. இப்போது, நல்ல பொறுப்பில் இவர் இருந்தாலும்கூட, பாஜகவில் சேரப்போவதாகவும், அவரை பாஜக சார்பில் திருச்சி எம்பி தொகுதியில் போட்டியிட வைக்க, மாநில தலைவர் அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகவும் அண்ணாமலை அடுத்தக்கட்ட நடைபயணத்தின்போது, சாருபாலா பாஜகவில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த தகவலை சாருபாலா உடனடியாக மறுத்துள்ளார்.. பாஜகவில் சேரப்போவதாக கூறப்படும் தகவல் உண்மை கிடையாது என்றும் அமமுகவில் தான் இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்..
பகீர் புரளி: அமமுகவை பொறுத்தவரை, பாஜகவுடன் இப்போதுவரை நல்ல இணக்கத்துடன் உள்ளதாகவே தெரிகிறது. எப்படியும் அமமுகவுக்கு இந்த முறை 4 சீட்கள் வரை மேலிட பாஜக ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது..
உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் தமிழகம் வரஉள்ள நிலையில், அமமுக, ஓபிஎஸ் குறித்த கூட்டணி நிலைப்பாட்டினை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாம்.. அப்படியிருக்கும்போது, அமமுக சாருபாலா, பாஜகவுக்கு செல்ல போவதாக சொல்வது உண்மையா? பொய்யா? இப்படி ஒர கிளப்பி விட்டது யார் என்றுதான் தெரியவில்லை..!












Click it and Unblock the Notifications