பாஜக பொறுப்புகளில் இருந்து திருச்சி சூர்யா 6 மாதம் நீக்கம்.. கட்சிப் பணி செய்யலாம்: அண்ணாமலை
சென்னை: பாஜகவின் பொறுப்புகளில் இருந்து திருச்சி சூர்யா சிவா 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா அவர்களுக்கும் இடயே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
இந்த சம்பவத்தை விசாரித்து கட்சித் தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனகசபாபதி அவர்களிடம் நவம்பர் 22 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர்
இதன் அடிப்படையில் திருப்பூரில் இன்று ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு முன்பு சூர்யா சிவாவும் டெய்சி சரணும் ஆஜராகி சம்பவம் குறித்து விளக்கத்தை அளித்தனர். அவர்கள் இருவரும் நடந்தவற்றை எல்லாம் மறந்து சுமூகமாக சகோதர சகோதரிகளாக பயணிக்க விரும்புவதாக ஒழுங்கு நடவடிக்கை குழுவினரிடமும் பின் பத்திரிகையாளர்களிடமும் தெரிவித்தனர்.

நடந்தவை மறந்துவிட்டு
நடந்தவை மறந்துவிட்டு சுமூகமாக செல்ல அவர்கள் விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என நாமே ஒப்புக் கொள்வதை போல் ஆகிவிடும். பெண்களை தெய்வமாக போற்றும் கட்சி நமது பாஜக. தமிழகத்தில் உள்ள சில திராவிட கட்சிகளை போல நாமும் பெண்களின் மேல் எய்யப்படும் அவதூறுகளை கண்டும் காணாதவர்களை போல் கடந்து செல்ல மாட்டோம்.

பொது மேடைகளில் கொச்சை
பெண்களை பொது மேடைகளில் கொச்சைப்படுத்துவர்கள், ஆபாச காணொளியில் காட்சி அளித்தவர்கள், பெண்களை தரக்குறைவாக தொலைபேசியில் பேசியவர்கள் கட்சி கூட்டத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் போன்றோரின் கூடாரமாக திமுத செயல்பட்டு கொண்டிருக்கிறது.

பெண்களை இழிவுப்படுத்துவது
பெண்களை இழிவுப்படுத்துவதை பாஜக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது மற்றும் சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாஜக மாநிலத் தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன். நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்ளை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம் ஆதலால் ஒரு மாநிலத் தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது.

சூர்யா சிவா சஸ்பெண்ட்
ஆகவே தமிழக பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடி வரும் என அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 1












Click it and Unblock the Notifications