த்ரிஷா குறித்த விமர்சனம்.. அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டாரா பாஜகவின் நயினார் நாகேந்திரன்?
சென்னை: அரசியலில் கொள்கை ரீதியான விமர்சனங்களைத் தாண்டி, தனிப்பட்ட நபர்களை, குறிப்பாகப் பெண்களை மையப்படுத்திப் பேசுவது துரதிர்ஷ்டவசமானதாக பார்க்கப்படுகிறது. அண்மையில் தான் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பாஜகவின் நயினார் நாகேந்திரன் த்ரிஷாவை மையப்படுத்தி பேசி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவே தற்போது பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பேசும் தகவலை வைத்து அவசரப்பட்டு நயினார் பேசிவிட்டதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விஜய்யின் நிலைப்பாடு என்ன
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது முதலே திமுகவை தான் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவையோ அதிமுகவையே பெரிய அளவில் விமர்சித்தது கிடையாது. விஜய் தனது மாநாடுகளிலும் கூட்டங்களிலும் திமுகவை "அரசியல் எதிரி" என்றும், பாஜகவை "கருத்தியல் எதிரி" என்றும் மிகத் தெளிவாக அறிவித்து அரசியல் செய்து வருகிறார். நேற்று சேலம் கூட்டத்தில் கூட, "எங்களுக்குக் கொள்ளையடித்த அனுபவம் இல்லை" என திமுகவை நேரடியாகத் தாக்கி பேசினார். ஆனால் அதிமுக பாஜக குறித்து பெரிய அளவில் விமர்சனங்களை வைக்கவே இல்லை... விஜய்யை பொறுத்தவரை திமுகவின் வாக்குகளைப் பிரிக்கக்கூடிய ஒரு சக்தியாகவே தன்னை முன்னிறுத்துகிறார். திமுகவிற்கு மாற்று என்றே தனது கட்சியை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார்.
வாக்கு வங்கி பாதிப்பு
ஆனால் எதார்த்தம் என்னவென்றால், தமிழ்நாட்டில் ஒரு புதிய கட்சி உதயமாகும்போது, அது ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளையும், இளைஞர்களின் வாக்குகளையும் ஈர்க்கும். அதுவும் விஜய் மாதிரியா உச்சநட்சத்திரம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது, அவரே முதல்வர் வேட்பாளராக களம் இறங்கும் போது, வாக்குகள் கண்டிப்பாக கணிசமாக பிரியும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 2006ல் விஜயகாந்த் ஆரம்பித்த கட்சி தான் ஜெயலலிதா ஆட்சி அமையாமல் போக காரணமாக இருந்தது.

2006 வரலாறு
அதேபோல் விஜயகாந்த் பிரித்த 10 சதவீத வாக்குகளும் திமுகவை மைனாரிட்டி ஆட்சி நடத்த காரணமாக இருந்தது. எனவே விஜய் ஒரே ஒரு தொகுதியில் ஜெயித்தாலும், அல்லது ஜெயிக்காமல் போனாலும், அல்லது கணிசமான இடங்களில் ஜெயித்தாலும் 2006 போலவே திமுக கூட்டணிக்குச் சவாலாக அமையலாம். அதேசமயம், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறினால் அது மறைமுகமாக ஆளுங்கட்சியான திமுகவிற்கு சாதகமாகவும் முடிய வாய்ப்புண்டு. இதனால் தான் அவரைப் பலரும் பலவிதமாக விமர்சிப்பதாக பார்க்கப்படுகிறது.
பாஜக அதிமுக கூட்டணிக்கு என்ன சிக்கல்
தற்போதைய சூழலில் அதிமுக பாஜக கூட்டணியில் ஒருவேளை நடிகர் விஜய் இணைந்தால், திமுக கூட்டணிக்கு பெரிய நெருக்கடியாக இருக்கும் என்றே நம்புகிறார்கள் அரசியல் நிபுணர்கள். இதை அமோதிக்கும் விதமாகவே அதிமுக கூட இவ்வளவு நாளாக விஜய்யிடம் மென்மையாகவே நடந்தது. கரூர் விஷயத்தில் கூட பாஜகவும் மென்மையாக நடந்து கொண்டது. அண்மையில் கூட பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் 15 சதவீதம் வாக்குகள் விஜய் பெற்றாலும் அது பூஜியம் தான் என்றும், திமுகவிற்கு சாதகமாக முடியும் என்றும், எனவே பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
திமுகவே வைக்காத விமர்சனம்
ஆனால் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் த்ரிஷா தொடர்பாக பேசிய விமர்சனங்கள் இதுவரை திமுகவே எடுக்காத விமர்சனம் ஆகும். அப்படியான தனிநபர் தாக்குதலை அதிமுக, திமுக விஜய் மீது ஒருமுறை கூட வைத்தது இல்லை.. சமூக வலைதளங்களில் சண்டை போடுபவர்கள் வதந்தியாக பேசுபவதை அப்படியே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பொதுவெளியில் பேசியதை பலரும் விமர்சிக்கிறார்கள். அரசியலில் கொள்கை ரீதியான விமர்சனங்களைத் தாண்டி, தனிப்பட்ட நபர்களை, குறிப்பாகப் பெண்களை மையப்படுத்திப் பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்றே கூறுகிறார்கள்
ஏன் த்ரிஷாவை மையப்படுத்துகிறார்கள்?
விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படங்கள் மற்றும் அவர்களுக்கு இடையேயான நட்பை வைத்து, அரசியல் எதிரிகள் சிலர் சமூக வலைதளங்களில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது விஜய்யின் நற்பெயரைக் களங்கப்படுத்தவும், அவரை ஒரு முதிர்ச்சியற்ற தலைவராகக் காட்டவும் செய்யப்படும் முயற்சியாக தவெக பார்க்கிறது.
விமர்சனத்தின் தரம்
அப்படியான விமர்சனங்களை பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போன்ற மூத்த அரசியல்வாதிகள் சினிமா நட்சத்திரங்களை அரசியலோடு இணைத்துப் பேசும்போது, அது பெரும்பாலும் திசைதிருப்பும் அரசியலாகவே அரசியல் நிபுணர்கள் பார்க்கிறார்கள். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது சக கலைஞர்களுடனான நட்பையோ அரசியலில் இழுப்பது தரம் குறைந்த செயலாகவே நடுநிலையாளர்களால் கருதப்படுகிறது.
இத்தகைய விமர்சனங்கள் சரியானதா?
இது போன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்கள் ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. அறம் மீறல்: ஒரு மாற்றத்தை விரும்பி அரசியலுக்கு வரும் எவரையும் கொள்கை ரீதியாக எதிர்கொள்வதே முறை. அதை விடுத்து, பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவோ அல்லது தனிப்பட்டத் தாக்குதல்களைத் தொடுப்பதோ தமிழகத்தின் அரசியல் பண்பாட்டிற்கு எதிரானது என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. இன்றைய வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள், இத்தகைய தரமற்ற விமர்சனங்களை ரசிப்பதில்லை.
அவசரப்பட்ட நயினார் நாகேந்திரன்
இது போன்ற பேச்சுகள் பேசும் நபரின் மீதும், அவர் சார்ந்த கட்சியின் மீதும் அதிருப்தியையே உருவாக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அதேநேரம் அண்மையில் தான் தமிழிசை சௌந்திரராஜன், அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு பதில் வருவதற்குள் அவசரப்பட்டு நயினார் பேசிவிட்டதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications