காத்திருந்து காத்திருந்து.. வலை விரித்தும் விழாத விஜய்! திக்கு தெரியாமல் தவிக்கும் TTV தினகரன்!
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், தற்போது பாஜக கூட்டணியில் இருந்தும் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் எப்படியாவது விஜயுடன் கூட்டணி சேர்ந்து விடலாம் என வலை விரித்தும் காத்திருந்தும் விஜய் தரப்பிலிருந்து எவ்வித ரியாக்ஷனும் இல்லை. இதனால் கடந்த தேர்தலை போல சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா என யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே சூடு பிடித்து விட்டது. தமிழகத்தில் கால் பதிக்க பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வரும் நிலையில் அதிமுக உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. காரணம் இந்த முறையாவது குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என்பதற்காகத் தான்.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் உறுதியான பேச்சு காரணமாக கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர். இதன் பின்னணியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிமுக கூட்டணி
ஏற்கனவே தன்னால், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை எக்காரணத்தைக் கொண்டும் கூட்டணியில் சேர்க்கக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதமாக இருந்தார். இதை அடுத்து மோடி, அமித்ஷா தமிழகம் வந்தபோது டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த டிடிவி தினகரன் தானாகவே கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதற்கிடையே விஜயுடன் கூட்டணி சேரலாம் என டிடிவி தினகரன் ஓபிஎஸ் முயன்று வந்தனர். பல நேரங்களில் விஜயை ஓபிஎஸ், டிடிவி தினகரன் மாறி மாறி புகழ்ந்து வந்தனர்.
டிடிவி தினகரன்
இதற்கிடையில் யாரும் எதிர்பாராத விதமாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றது. அந்த கொடூர சம்பவத்தில் 41 உயிர்கள் பலியானதால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக விஜய் வெளியே வரவில்லை. விஜய் இல்லாத குறையை போக்கும் வகையில் அதிமுக, பாஜக, அமமுக, ஓபிஎஸ் என பலரும் அவருக்கு ஆதரவாக பேசி வந்தனர். எந்த ஒரு தலைவரும் தன் தொண்டன் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டான், இது விபத்து. அதே நேரத்தில் இதற்கு திமுகவும் காவல்துறையும் தான் காரணம் என அதிமுகவும் பாஜகவும் பேசி வந்தன. தனக்கு ஆதரவாக பேசுவதால் அதிமுக பாஜகவுடன் விஜய் கூட்டணி வைப்பார் என எதிர்பார்த்தனர்.
விஜய் அரசியல்
ஆனால் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுவில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அறிவிக்கப்பட்டு விட்டதால் விஜய் அதிமுக பாஜக கூட்டணியில் இணைய மாட்டார் என சூசகமாக தமிழக வெற்றி கழகம் அறிவித்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்.
டிடிவி தினகரன் ஏமாற்றம்
அதே நேரத்தில் விஜய் வருகையால் தான் அதிமுகவும் பாஜகவும் தங்களை வெளியேற்றி விட்டது, தற்போது அந்தக் கூட்டணியில் விஜய் சேர மாட்டார் என தெரிந்து கொண்ட டிடிவி தினகரன் விஜயுடன் கூட்டணி சேரலாம் என திட்டமிட்டு இருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே எங்கள் கட்சி வெற்றி கூட்டணியில் இணையும், நாங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சி தான் வெற்றி பெறும், மிகப் பிரம்மாண்டமாக கூட்டணி இருக்கும் என விஜய் மனதில் வைத்து பேசி வந்தார் டிடிவி தினகரன்.
விஜய் கூட்டணி
ஆனால் இதுவரை விஜய் கூட்டணி தொடர்பாக எந்தவித ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. மேலும் தனது பேச்சிலோ அறிக்கையிலோ தங்கள் கட்சியின் பெயரை தவிர வேறு எந்த கட்சியின் பெயரையோ தலைவர்களின் பெயரையோ குறிப்பிடவில்லை. மேலும் கரூர் நெருக்கடி சமயத்தில் தனக்கு ஆதரவாக பேசிய எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கூட விஜய் பேசவில்லை.
புதிய கூட்டணி
இதனால் டிடிவி தினகரனுடன் விஜய் கூட்டணி சேர விருப்பமில்லை என சொல்லப்படுகிறது. பல மாதங்களாக நேரடியாகவும் மறைமுகமாகவும் விஜய்க்கு ஆதரவாக பேசியும், சில நேரங்களில் அதிமுகவையும் திமுகவையும் ஆட்சியை விட்டு அகற்றவும் ஆட்சிக்கு வராமல் தடுக்கவும் விஜய் உடன் கூட்டணி சேர தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் பேசியும் விஜய் கண்டுகொள்ளாததால் அவர் தரப்பு மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது இதை எடுத்து கடந்த சட்டமன்றத் தேர்தலை போல சிறிய சிறிய கட்சிகளோடு கூட்டணி அமைக்கலாமா என ஆர்வம் காட்டி வருகிறார் டிடிவி தினகரன் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications