9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்!
சென்னை: டிடிவி தினகரன் கடைசியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 2017 ஆம் ஆண்டு வந்திருந்த நிலையில் தற்போது 9 ஆண்டுகள் கழித்து இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக மீண்டும் வந்துள்ளது வைரலாகி வருகிறது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடந்தது.

இந்த நிகழ்வுக்காக டெல்லியில் இருந்து தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், டெல்லியில் இருந்து வந்திருந்தார். இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து பாஜகவுக்கு 27 தொகுதிகளும் அமமுகவுக்கு 11 தொகுதிகளும் அன்புமணி பாமகவுக்கு 18 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 56 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 178 இடங்கள் பாக்கியுள்ளன. அதில் புதிய நீதி கட்சி, ஐஜேகே, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமாகா உள்ளிட்டவைகளுக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் டிடிவி தினகரன் 9 ஆண்டுகள் கழித்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு மாடத்தில் இருந்து தொண்டர்களுக்கு கையசைத்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு டிடிவி தினகரன் வந்திருந்தார்.
அதாவது அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த போது அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்து ஆலோசனை நடத்தியிருந்தார். அது போல் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதும் அவர் வந்திருந்தார்.
2017 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபோது, டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அன்று முதல் இன்று வரை (மார்ச் 2026) அவர் அதிமுக அலுவலகத்திற்குச் செல்லவில்லை.
2026 தேர்தலுக்காக அதிமுக - அமமுக கூட்டணி அமைந்திருந்தாலும், பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தனியார் விடுதிகளில் அல்லது டெல்லியில் தான் நடைபெறுகின்றனவே தவிர, அவர் இன்னும் அதிமுக அலுவலகத்திற்குள் நுழையவில்லை. ஆனால் அவர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்ததை அவரது ஆதரவாளர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
பல ஆண்டுகளாக "எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதே என் வேலை" என்று கூறிவந்த டிடிவி தினகரன், தற்போது 2026 தேர்தலில் அவருடன் கைகோர்த்துள்ளார். இதற்கு முக்கியக் காரணங்கள்:
வாக்கு வங்கிச் சிதறல்: தனித்துப் போட்டியிட்டால் இருவருமே தோற்க நேரிடும் என்பதையும், திமுகவை வீழ்த்த 'தாய் கழகங்கள்' இணைய வேண்டும் என்பதையும் பாஜக தலைமை வலியுறுத்தியது.
டெல்லி தலையீடு: மார்ச் 2026-ல் டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு, "பழைய கசப்புகளை மறந்து தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுவோம்" என தினகரன் அறிவித்தார்.
தென் மாவட்ட பலம்: முக்குலத்தோர் சமூக வாக்குகளை மீண்டும் அதிமுக பக்கம் கொண்டு வர தினகரனின் உதவி எடப்பாடி பழனிசாமிக்குத் தேவைப்பட்டது.












Click it and Unblock the Notifications