TTV Dinakaran: கருணாநிதி, ஸ்டாலின் தமிழ் பெயர்களானு கேட்க திருமாவளவனுக்கு துணிச்சல் இருக்கா? தினகரன் கேள்வி
சென்னை: தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருப்பது அரைவேக்காட்டுத்தனமான பேச்சு என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினகரன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
ராஜராஜன் தமிழ் பெயரா
ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் தொல்.திருமாவளவன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப் பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.
எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். @thirumaofficial என அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
அது போல் திருமாவளவன் பேச்சுக்கு அண்ணாமலையும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழல் மற்றும் இந்து மத விரோத விமர்சனங்களை எதிர்கொள்ளும் திமுக அரசின் பின்னணியில், பாஜக மற்றும் சங் பரிவார் மீது நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்த இந்தியா கூட்டணி எம்.பி. திருமாவளவன், தற்போது பத்து நூற்றாண்டுகளுக்கும் முந்தைய சோழ, பாண்டிய மன்னர்களை இழிவுபடுத்தியுள்ளார். இவர்களின் பொற்கால ஆட்சியில் தமிழ்மொழி தற்போதைய தமிழக எல்லைகளைத் தாண்டி செழித்து வளர்ந்தது.
திருமாவளவனின் இக்கருத்துகள் கண்டிக்கத்தக்கவை. சோழ, பாண்டிய மன்னர்களின் பாரம்பரியத்திற்கும், தமிழர்களின் பெருமைக்கும் இது இழுக்கு. அவரது பேச்சு ஆழமான வரலாற்று அறிவின்மையையே வெளிப்படுத்துவதாக பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
ராஜா ராஜ சோழன், ராஜேந்திரன் பெயர்கள் தமிழா என அவர் வினவினால், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி, கலாநிதி உள்ளிட்ட கோபாலபுரம் குடும்பப் பெயர்கள் தமிழ்தானா என்ற எதிர் கேள்வியும் பரவலாக எழுகிறது.
தமிழ் மொழி
தமிழ் மொழியின் உண்மையான வளர்ச்சிக்கும், உலகளவில் அதன் பெருமைக்கும் குறைவான பங்களிப்பைச் செய்தது திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் எனப் பரவலாகக் கருதப்படுகிறது.
திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரு உண்மையை உணர வேண்டும்: தமிழக வரலாறு 1949-ல் திமுக தொடங்கப்பட்டபோது ஆரம்பிக்கவில்லை. மாறாக, மாநிலத்தின் பல சிக்கல்கள் அன்றிலிருந்தே உருவாயின. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் பேசியது என்ன
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது என்னவென்றால், "எனக்கு எந்த அரசன் மீதும் மரியாதை கிடையாது. யாரையும் நான் பெரிய சக்தியாக பார்ப்பது கிடையாது. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச் சுவரானது. சமஸ்கிருத மயமானது, இந்துத்துவமயமானது.
கோயில் கருவறைக்குள் இருந்த தமிழ் தூக்கி வீசப்பட்டது எல்லாம் பாண்டிய,சோழ, சேர, பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில்தான்! வேள்வி, யாகம் நடத்திய அரசர்கள் தமிழ் பெயர்களை மாற்றி வடமொழி பெயர்களை தங்கள் பெயர்களில் சேர்த்து கொண்டனர்.
ராஜராஜன் என்பது தமிழ் பெயரா, ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லா அரசர்களும் வடமொழியில் மயங்கி கிடந்தவர்கள். அவர்கள் எப்படிப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், அவர்கள்தான் என் தமிழ் ,தமிழ் கலாச்சாரம் அழிந்ததற்கு காரணம் என்பதை உணர்ந்தவன் நான். இவ்வாறு திருமாவளவன் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications