சத்தியமா விளங்கல..தேமுதிகவுக்கு தஞ்சையை விட்டுக் கொடுத்த டிடிவி - லையில் முக்காடு போட்ட அமமுகவினர்!
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ள நிலையில், இரு கட்சிகளும் பரஸ்பரம் தஞ்சை மற்றும் கீழ்வேளூர் தொகுதி பரிமாற்றம் செய்துள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்படும் நிலையில், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக கேட்ட தொகுதிகளை, தொகுதிகளின் எண்ணிக்கையை அதிமுக வழங்காததால், தடாலடியாக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. பிறகு, டிடிவியின் அமமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தையில் ஈடுபட, பிறகு அனைத்து தொகுதியில் அக்கட்சி தனித்துப் போட்டியிடுவதாக கூறப்பட்டது. பிறகு மீண்டும் அமமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தையில் ஈடுபட, அக்கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்கினார் டிடிவி தினகரன். பிறகு, 60 தொகுதிகளாக பட்டியலும் வெளியானது. இந்நிலையில், தற்போது இரு தொகுதிகளை பரஸ்பரம் இரு கட்சிகளும் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.

தேமுதிகவுக்கு
இதுகுறித்து, அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அமமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அமமுக போட்டியிடுவதாக அறிவித்திருந்த தஞ்சை சட்டப்பேரவையைத் தொகுதியை தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு அளித்துவிட்டு, தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது எனவும் பரஸ்பரம் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக கோரிக்கை
தேமுதிக தஞ்சை தொகுதியை ஒதுக்கும் படி கேட்டுக் கொண்டதால், அமமுக தொகுதியை மாற்றியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தஞ்சை அமமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, 'எங்களுக்கே என்ன விவரம்-னு தெரியல. மாற்றப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக தஞ்சை கேட்டு வாங்கியிருக்கலாம்' என்றனர்.

சசிகலா உறவினர்கள்
தஞ்சை தொகுதியில் டிடிவி தினகரன், சசிகலாவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. மன்னார்குடி தான் ஊர் என்றாலும், சசிகலாவின் பெரும்பாலான உறவினர்கள் வசிப்பது தஞ்சாவூரில் தான். தினகரனின் மாமனார் வீடே தஞ்சையில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட செல்வாக்கான இடத்தை தேமுதிகவுக்கு விட்டுத் தந்தது ஏன்? என்ற கேள்வி அமமுக-வினரிடையே ஏற்பட்டுள்ளது.

முக்கிய ஊர்கள்
கீழ்வேளூர் தொகுதியைப் பொறுத்தவரை கிறிஸ்துவர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான வேளாங்கண்ணி, இந்துக்களின் வழிபாட்டு தலமான எட்டுக்குடி, கலைஞர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை உள்ளிட்ட முக்கிய ஊர்கள் இத்தொகுதிக்குள் உள்ளன.

கட்சியினர் குழப்பம்
இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருப்பது திமுகவின் மதிவாணன். தவிர, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இங்கு செல்வாக்குடன் உள்ளன. பெரும்பாலும் ஜாதி வாக்குகள் இங்கு எடுபடாது. இந்நிலையில், தஞ்சையை விட்டுவிட்டு, அமமுக இங்கு போட்டியிடுவதாக அறிவித்திருப்பது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications