இன்பநிதி படம் கரெக்டா ரிலீஸ் ஆகுது.. ஆனால் விஜய் படம் ஆகல! பின்னணியில் யார்? ஆதவ் அர்ஜுனா டென்ஷன்
சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதது குறித்து கருத்து தெரிவித்தார். பாஜகவோட மிகப்பெரிய எதிரி என சொல்லும் திமுக உதயநிதியின் மகன் இன்பநிதியின் படம் மட்டும் கரெக்டா பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
அந்த படத்தில் நடித்தவர்கள் கூட டெல்லி சென்று பொங்கல் விழா கொண்டாடுவாங்க.. ஆனால் எங்கள் தலைவர் (விஜய்) படம் மட்டும் ரிலீஸ் ஆகாது. இப்போது தெரியும். ஜனநாயகன் படம் வெளியாகாமல் இருப்பதற்கு யார் காரணம் என" என்று ஆதவ் அர்ஜுனா பேசினார்.

விஜய்யின் ஜனநாயகன் படம்
விஜய்யின் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி பொங்கலுக்கு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
இந்த படம் வெளியான சில தினங்களில் டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு அரசியல் ரீதியாகவும் விவாதப்பொருளானது. இதேபோன்று பராசக்தி, ஜனநாயகன் இரு திரைப்படங்களுக்குமே முதலில் சென்சார் சான்று கிடைக்காமல் இருந்தது.
விஜய் படம் மட்டும் ரிலீஸ் ஆகாது
ஆனால் திரைப்படம் ரிலீசுக்கு ஒரு நாள் முன்பு பராசக்தி படத்திற்கு சென்சார் சான்று கிடைத்தது. ஜனநாயகன் படத்திற்கு கிடைக்காத நிலையில் இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்துள்ளார். ஜனநாயன் பட விவகாரம் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:-
பாஜகவோட மிகப்பெரிய எதிரி திமுக என்று சொல்வார்கள். ஆனால் திமுக துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் படம் கரெக்டா பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அதில் நடித்தவர்கள் எல்லாரும் பொங்கல் விழா டெல்லியில் கொண்டாடுவார்கள். ஆனால் எங்கள் தலைவர் (விஜய்) படம் மட்டும் ரிலீஸ் ஆகாது. அப்போ அதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்று?
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் தனது கடைசி படம் என விஜய் அறிவித்து இருப்பதால் ஜனநாயகன் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்த படத்தை கடந்த 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது.
ஆனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்று அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக சிபிஎப்சி சார்பில் டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் காரசார வாதங்கள் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications