அண்ணா அறிவாலயத்தில் சத்தமேயில்லை.. போட்ட பந்தலை பிரித்த திமுகவினர்.. அதிர வைத்த தவெக 1 கோடி வாக்கு
சென்னை: 1 கோடி வாக்குகள் என்ற இமாலய இலக்கைக் கடந்து தமிழக அரசியலில் புதிய சகாப்தம் படைத்துள்ளது தவெக.. இந்த அசுர வளர்ச்சியால் ஆளுங்கட்சியான திமுக தனது கோட்டைகளை இழந்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகளால் அண்ணா அறிவாலயம் முற்றிலும் களைவிழந்து காணப்படுகிறது.. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத இந்த அதிரடி மாற்றம், திராவிடக் கட்சிகளின் பலத்தை உலுக்கி புதியதொரு அரசியல் புரட்சிக்கு வித்திட்டுள்ளது..
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும் தி மு க தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த 2 முனைப் போட்டி தகர்க்கப்பட்டு, புதிய அரசியல் மாற்றம் நிகழ்ந்திருப்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

1 கோடி தவெக வாக்குகள்
குறிப்பாக, நடிகர் விஜய்யின் தவெக மிகக்குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டு, ஆளுங்கட்சியின் கோட்டைகளைத் தகர்த்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 1 கோடி வாக்குகள் என்ற பிரம்மாண்ட இலக்கைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது..
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, தமிழகத்தின் மொத்த வாக்குகளில் சுமார் 25 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள தவெக, ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி அசுர வளர்ச்சி கண்டுள்ளது..
தவெக அமோக வாக்கு வங்கி
நடிகர் விஜய் தலைமையிலான இந்த இளம் கட்சி, களமிறங்கிய முதல் தேர்தலிலேயே 1 கோடி வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதோடு, பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் டெபாசிட்டைப் பறிக்கும் அளவிற்கு தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது..
குறிப்பாக, இளைய தலைமுறையினர் மற்றும் பெண்களின் அமோக ஆதரவே இந்த அசுர வெற்றிக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இவ்வளவு பெரிய வாக்கு வங்கியைப் பெற்றுள்ளது இதுவே முதல்முறை என்பதால், இது ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது..
டல்லடிக்கும் அண்ணா அறிவாலயம்
மற்றொருபுறம், தலைநகர் சென்னையின் முக்கியத் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொடக்கத்தில் முன்னிலை வகித்தாலும், அடுத்தடுத்த சுற்றுக்களில் தவெக வேட்பாளர் வ.செ. பாபுவிடம் கடும் சவாலை எதிர்கொண்டு பின்தங்கியிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போன்ற திமுகவின் பாரம்பரியக் கோட்டைகளிலேயே தவெக வேட்பாளர்கள் (மயிலாப்பூரில் வெங்கடரமணன், கோயம்புத்தூர் வடக்கில் சம்பத் குமார் போன்றோர்) முன்னிலை பெறுவது, மக்கள் மாற்றத்தை விரும்புவதைத் தெளிவாகக் காட்டுகிறது.
முக்கியப் புள்ளிகளின் பின்னடைவு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முன்னிலை வகித்தாலும், ஒட்டுமொத்தமாக அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் எப்போதும் காணப்படும் உற்சாகம் மறைந்து, தற்போது அமைதியும் ஒருவிதப் பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளது. அறிவாலயத்தில் திமுகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள், நிர்வாகிகளுக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது. ஆனால இப்போது அண்ணா அறிவாலயத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
"சூரியன் மறையப்போகிறது'" என்ற தவெகவின் தேர்தல் முழக்கம் நிஜமாகிவிடுமோ என்ற அச்சம் அறிவாலய வட்டாரத்தில் நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய்யின் வெற்றி?
இந்தத் தேர்தல் முடிவுகளை உற்றுநோக்கினால் நமக்கு ஒன்று விளங்குகிறது.. அதாவது தமிழக மக்கள் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தியைத் தேர்வு செய்திருப்பது தெளிவாக தெரிகிறது.. குறிப்பாக இளைஞர்களின் வாக்குகள் மற்றும் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி ஆகியவை விஜய்யின் வெற்றிக்குக் கைகொடுத்துள்ளன. திமுக தனது 5 வருட சாதனைகளை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்த போதிலும், தவெகவின் எழுச்சி அந்த வியூகங்களைத் தவிடு பொடியாக்கியுள்ளது.
அதேசமயம், அ.தி.மு.க தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வருகிறது. பாஜகவின் நயினார் நாகேந்திரன் போன்ற முக்கியத் தலைவர்களும் பின்னடைவைச் சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது. தமிழக அரசியலில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருப்புமுனையாக கருதப்படுகிறது.
திமுகவின் இந்தத் திடீர் சரிவு, அக்கட்சியின் உட்கட்டமைப்பு மற்றும் எதிர்கால வியூகங்கள் குறித்துப் பெரிய கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications