புஸ்ஸி ஆனந்துக்கு ரூ.1000 அபராதம்.. தவெக நிர்வாகிகளின் ஆர்வக் கோளாறால் மாட்டிக்கொண்டார்!
சென்னை: ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு ரூ.1000 அபராதம் விதித்து மாம்பலம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர். அதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கிறது. தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பாக, கட்சியின் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தியாகராய நகர் பகுதியில் ஒரு நலத்திட்ட உதவிகள் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் பங்கேற்றார். சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகளை வழங்கினார் புஸ்ஸி ஆனந்த்.
அப்போது, கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று டூவீலரை ஓட்டினார் புஸ்ஸி ஆனந்த். பின்னால் கட்சி நிர்வாகி ஒருவரை அமர வைத்து டூவீலரை ஓட்டிச் சென்றார் புஸ்ஸி ஆனந்த். அப்போது புஸ்ஸி ஆனந்த் ஹெல்மட் அணியவில்லை. புஸ்ஸி ஆனந்த்தை பின் தொடர்ந்து ஏராளமான தவெக தொண்டர்களும் சென்றனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடுத்து, அனுமதி இன்றி இப்படி செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். ஆனாலும் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் நிழற்குடைகளை வழங்கினார். தொடர்ந்து, தவெக கட்சியினரை சேஸிங் செய்த போலீசார், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் தவெக கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு ரூ.1000 அபராதம் விதித்து மாம்பலம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications