சோறு தண்ணீரின்றி மாடியில் தங்கி.. விஜய் மகனின் டிரஸ்ஸை எடுத்து போட்டுக் கொண்ட நபர்.. சென்னையில் பரபர
சென்னை: நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டுக்குள் பாதுகாப்புகளைக் கடந்து ஒரு நபர் உள்ளே நுழைந்தது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அத்துடன் விஜய் வீடு முழுவதுமே போலீசார் சோதனைக்குட்படுத்தினார்கள்.. மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சோதனை மேற்கொண்டது, பெரும் பரபரப்பை தவெகவுக்குள் ஏற்படுத்தி வருகிறது.
தவெக தலைவர் விஜய்யின் சென்னை நீலாங்கரை பங்களாவில் பரபரப்பு ஒன்று சம்பவம் நடந்துவிட்டது.. நேற்று முன்தினம் மொட்டை மாடியில் விஜய் வாக்கிங் செல்ல வந்தபோது, அங்கே ஒரு இளைஞர் உட்கார்ந்திருந்ததை பார்த்து விஜய் அதிர்ந்துள்ளார்.

விஜய்யை பார்த்ததுமே அந்த இளைஞர் ஓடி வந்து கட்டிப்பிடித்துள்ளார்.. அதற்குள் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த செக்யூரிட்டிகள், போலீசாருக்கு தகவல் தந்து வரவழைத்து, அந்த நபரை ஒப்படைத்தனர்.
ஆனால், அந்நபரின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக இருந்ததால், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை தருமாறும் விஜய் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
நீலாங்கரை வீட்டு மொட்டை மாடி
இதையடுத்து, அந்த இளைஞரை நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தபோதுதான், அருண் என்ற அந்த 24 வயது நபருக்கு, கடந்த 4 ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. வேளச்சேரியில் தன் சித்தி வீட்டில் இந்த இளைஞர் தங்கியிருந்தபோது, விஜய்யை நேரில் பார்க்க, யாருக்கும் தெரியாமல் விஜய் வீட்டிற்குள் நுழைந்ததும் தெரியவந்தது.
எனவே கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் இளைஞரை பாதுகாப்பாக போலீசார் ஒப்படைத்தனர். அங்கு இளைஞருக்கு சிகிச்சையும் நடக்கிறது.
நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரிலுள்ள விஜய்யின் வீட்டை சுற்றி, பிரமாண்டமான மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.. எனினும் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய அரசு சார்பாக Y பிரிவு பாதுகாப்பும் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது..
பவுன்சர்கள், செக்யூரிட்டிகள்
எனவே, துணை ராணுவப் படை வீரர்கள், 8 முதல் 11 பேர் சுழற்சி முறையில், அதிநவீன துப்பாக்கியுடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும், தொண்டர்கள் யாரும் விஜயை நெருங்க விடாமல், தூக்கி வீசும் பவுன்சர்கள், செக்யூரிட்டிகள் என அத்தனை பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
எனினும், இவ்வளவு பாதுகாப்பையும் மீறி விஜய் வீட்டின் பின்புறம் பகுதியிலுள்ள கேட் வழியாக இளைஞர் உள்ளே நுழைந்துள்ளார்.. அதிலும் 2 நாட்களுக்கு முன்பே விஜய் வீட்டு மாடியில் வந்து தங்கியிருக்கிறார்.. சோறு, தண்ணீர் இல்லாமல் ஒருநாள் முழுக்க மொட்டை மாடியிலேயே தங்கியிருந்துள்ளார்.
வெடிகுண்டு சோதனை
அத்தனை பாதுகாப்புகளையும் மீறி இளைஞர் வீட்டிற்குள் புகுந்தது, விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் வீட்டிற்குள் இளைஞர் புகுந்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டு ஏதேனும் உடன் வைத்துள்ளாரா என்ற கோணத்திலும் சந்தேகம் எழுந்தது.
இதனால் ஒய் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளின் தகவலின் பேரில் விஜய் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.. உடனே விஜய்யின் வீடு முழுதும், மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நேற்று முழுவதுமே சோதனை நடத்தினார்கள்.. அதில் மர்ம பொருள் ஏதும் சிக்கவில்லை.
டிரஸ்ஸை எங்கிருந்து எடுத்தார்
இதனிடையே, விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரது தரப்பில் நீலாங்கரை காவல் நிலையத்தில், புகார் ஒன்றும் அளிக்கப்பட்டு உள்ளது.
இதில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால், வீட்டிற்குள் புகுந்த இளைஞர், விஜய் மகனின் டிரஸ்ஸை போட்டு பார்த்து அழகு பார்த்தாராம்.. விஜய் மகனின் ஆடையை எங்கிருந்து எடுத்தார் என்று தெரியவில்லை? வீட்டிற்குள் நுழைந்து எடுத்தாரா? அல்லது மொட்டை மாடியில் விஜய் மகனின் ஆடைகள் துவைத்து காய வைக்கப்பட்டிருந்ததா தெரியவில்லை. எனினும் நீலாங்கரை வீட்டு சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.












Click it and Unblock the Notifications