தனிப்பட்ட உரிமை.. மொழி திணிப்புக்கு எதிராக பேசிய விஜய்.. "இந்தி திணிப்பு" வார்த்தையே வரலையே!
சென்னை: தமிழ்நாட்டில் எந்த மொழியை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் கற்றுக் கொள்ளலாம்; அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாநில அரசின் கல்விக் கொள்கையை மொழிக் கொள்கையை மீறி வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி ப்ரோ என்றும் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிலுவையில் உள்ள ரூ.2,151 கோடி நிதியை விடுவிப்போம் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கும் போது, தமிழ்நாடு மட்டும் ஏற்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்தி திணிப்பை எதிர்த்து போராடி வருகின்றன. இதனிடையே மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருகிறார். பணம் இருந்தால் மட்டும் இந்தி படிக்கலாம்.. அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் இந்தி படிக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் தனது தந்தையின் பெயரில் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருவதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார். இந்த நிலையில் தவெக 2ஆம் ஆண்டு விழாவில் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான தனது நிலைப்பாடு குறித்து விஜய் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் பேசுகையில், மும்மொழிக் கொள்கை என்று புதிய பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள்.
அதாவது மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை என்றால், கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்க மாட்டார்கள். இது பார்க்கும் போது, எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் சண்டை போடுவது போல் இருக்கிறது. இந்த நிதியை கொடுக்க வேண்டிய அவர்களின் கடமை. அந்த நிதியை வாங்க வேண்டியது மாநில அரசின் உரிமை. ஆனால் இவர்கள் 2 பேரும், பேசிக் கொண்டு செட்டிங் பண்ணி சோசியல் மீடியாவில் ஹேஷ்டாக் போட்டு விளையாடி கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அடிப்பதை போல் அடிப்பார்களாம். அதனை மக்கள் நம்ப வேண்டுமாம்.. இந்த விஷயங்களை நாம் சொல்லி மக்களுக்கு புரிய வேண்டியது தேவையே இல்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நம்ம ஊர் சுயமரியாதை ஊர். நாம் அனைத்து மொழிகளையும் மதிப்போம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தனிப்பட்ட முறையில் எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் படிக்கலாம்.
என்ன மொழி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் மொழிக் கொள்கையையும், கல்விக் கொள்கையையும் கேள்விக்குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால்.. அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால்.. எப்படி ப்ரோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்தி திணிப்பு என்ற வார்த்தையை கூட விஜய் சொல்லாமல் எதிர்ப்பு தெரிவித்திருப்பது விவாதமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications