மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன்! விஜயகாந்துக்கு விஜய் புகழஞ்சலி
சென்னை: புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன் என தவெக தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்த் மறைந்த போது இறுக்கமான முகத்துடன் தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜய், அவரது உடல் வைத்திருந்த கண்ணாடி பெட்டியில் தலையை வைத்து கண்ணீர் விட்டார். அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே செல்லும் போது மீண்டும் ஒரு முறை விஜயகாந்தின் முகத்தை பார்த்துவிட்டு சென்றார். அப்போது விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் தொடங்கினார்.
அன்று முதல் அரசியலில் விஜயகாந்தின் ரூட்டை விஜய் பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் தவெகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிரேமலதா இது குறித்து எதையும் சொல்லவில்லை. மாறாக கேப்டனின் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என விஜய்க்கு பிரேமலதா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்ததாக சொல்லப்பட்டது. எனவே வரும் தேர்தலில் விஜய்யின் தலைமையை ஏற்று தேமுதிக கூட்டணி அமைக்குமா இல்லை வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவு நாள், தேமுதிகவினரால் இன்று குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு தேமுதிக நேராக சென்று அழைப்பு விடுத்தது.
இன்றைய தினம் விஜயகாந்த் நினைவுதினத்தையொட்டி மக்களுக்கு அன்னதானம் வழங்க தேமுதிக ஏற்பாடு செய்துள்ளது. விஜயகாந்தின் நினைவிடம் உள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அங்குள்ள விஜயகாந்த் சமாதியிலும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்யப்பட்டது.
விஜயகாந்தின் நினைவிடத்திற்கு எந்தெந்த கட்சிகள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, மத்தியமைச்சர் எல்.முருகன், கரு நாகராஜன் உள்ளிட்டோர் வந்து மரியாதை செலுத்தினர்.
அது போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிடேடோர் வருகை தந்து விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அது போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications