தவெக மாநாடு நடைபெறும் நாளில் மழை பெய்யுமா? வெயில் கொளுத்துமா? டெல்டா வெதர்மேன் கணிப்பு!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய நாளில், மாநாடு நடைபெறும் இடத்தில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படாமல், மாநாட்டு தேதியை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில், ஆகஸ்ட் 21ஆம் தேதி வியாழக்கிழமை மாநாடு நடைபெறும் என்றும் அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் விஜய் அழைப்பு விடுத்தார்.

தவெக மாநாடு ஏற்பாடுகள்
சுமார் 506 ஏக்கரில் பார்க்கிங் அமைப்பது, மேடை அமைப்பது, நிழல் கூடம், மருத்துவ வசதி, பந்தல் அமைத்தல், தண்ணீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கான பணி நடந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், விஜய் நடத்தும் இந்த மாநில மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
விக்கிரவாண்டி மாநாட்டைக் காட்டிலும், மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்த தவெகவினர் திட்டமிட்டுள்ளனர். விக்கிரவாண்டி மாநாட்டில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதுரை மாநாட்டுக்காக சுமார் 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக மதுரை மாநாடு
தவெக மாநாட்டிற்காக ஐந்து முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேடை ஒருங்கிணைப்புக் குழு, மாநில தலைமை ஒருங்கிணைப்பு குழு, அமைப்பு குழு, தீர்மான குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு ஆகிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் நிர்வாகிகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதுரையில் தவெக மாநாடு நடைபெறும் நாளில் வானிலை எப்படி இருக்கும் என டெல்டா வெதர்மேன் கணித்துள்ளார். மதுரை மாநாட்டிற்கான வானிலை தகவல் எனக் குறிப்பிட்டு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:
மாநாட்டு நாளில் வானிலை
* தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் பகல்நேர வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரையில் பகல் நேரத்தில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழல் நிலவும்.
* பகல் நேர வெப்பநிலை பிற்பகலில் 37/38° செல்சியஸ் அளவிற்கு செல்லக்கூடும். அத்துடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக மக்கள் கூட்டம் கூடும் போது உணரும் வெப்பநிலை இயல்பிலிருந்து அதிகரிப்பதுடன் புழுக்கமான சூழல் ஏற்படக்கூடும்.
* இதனால் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு பிற்பகல் 12 மணி முதல் 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நீரிழப்புகள் (Dehydration) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
* அதேபோல காற்றின் போக்கில் நிலவக்கூடிய காற்று வேகமாறுபாடு காரணமாக மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடியுடன் கூடிய வெப்பச்சலன மழைக்கும் 50% வாய்ப்பு உள்ளது.
* இதன் காரணமாக தவெக மாநாட்டில் வெயில் & மழை இரண்டிற்கும் தேவையான முன்னேற்பாடுகளை செய்வது சிறந்தது. குறிப்பாக அனைவருக்கும் எளிதில் குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.
மழைக்கு வாய்ப்பு?
* வெப்பச்சலன இடிமழை 30 முதல் 40 நிமிடங்களே நீடிக்கக் கூடும். மாநாட்டை பாதிக்கும் அளவிற்கு மழை இருக்காது, சிறு இடையூறை ஏற்படுத்தக்கூடும்.
* மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் கருப்பு நிறம் (வெப்பத்தை ஈர்க்கும் என்பதால்) அல்லாத வெள்ளை/ சிவப்பு குடைகளை காலை முதலே வழங்கும் பட்சத்தில் வெயில், மழை இரண்டிலும் பங்கேற்பாளர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
குறிப்பு: இதனை அரசியல் பதிவாக கருத வேண்டாம், லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்திற்கு தேவையான முன்னெச்சரிக்கை வழங்குவதற்கே இந்த பதிவு." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications