யாருடன் கூட்டணி? மதுரை தவெக மாநாட்டில் விஜய் வெளியிடப் போகும் அறிவிப்பு.. அரங்கம் அதிரப்போகுது!
சென்னை: மதுரையில் ஆகஸ்ட் 21ல் நடக்கவுள்ள தவெக மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய் கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 234 சட்டமன்றத் தொகுதியிலும் தவெக தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்க உள்ள விஜய், மாநாட்டு அரங்கிலேயே சில வேட்பாளர்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரபத்தி பகுதியில் நடக்கவுள்ளது. இதற்கான காவல்துறை அனுமதி கிடைத்துவிட்ட சூழலில், மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரையிலேயே இருந்து மாநாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல், 2 மைதானங்களில் பார்க்கிங் வசதிகள், குழாய் மூலமாகத் தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.5 லட்சம் இருக்கைகள் போடப்பட உள்ளன. விக்கிரவாண்டி மாநாட்டை விடவும் பிரம்மாண்டமாக மதுரை மாநாட்டினை நடத்திவிட வேண்டும் என்பதில் தவெக தீவிரமாக இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் அதற்கேற்ப அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளன.
இன்னும் ஒரு வாரம் மட்டுமே தவெக மாநாட்டிற்கு இருக்கும் நிலையில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்களின் ஆதரவாளர்களை அழைத்து வர பேருந்துகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து வர தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே கடந்த சனிக்கிழமையன்று தவெக தலைவர் விஜய் நேரடியாக மாநாட்டுத் திடலைப் பார்வையிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. மாநாடு ஏற்பாடுகள் விஜய்க்கு திருப்தி அளித்ததன் காரணமாகவே, நேற்று தவெக தொண்டர்களுக்கு மாநில அதிர மதுரை மாநாட்டிற்குத் தயாராகுவோம் என்று தொண்டர்களுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் தவெக மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தவெக தலைவர் விஜய் மட்டுமே பேச உள்ளார். இந்த மாநாட்டில் விஜய் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. தவெக கட்சி தொடங்கி இதுவரை சுமார் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்ட நிலையில், எந்தக் கட்சியும் இதுவரை கூட்டணி அமைக்க வரவில்லை.
விசிகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் தவெக தீவிரமாக இருந்தது. ஆனாலும் கடைசி வரை திருமாவளவன் கூட்டணிக்கான கதவைத் திறக்கவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருப்பதால், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. இதனால் தவெக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இதனால் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தயார்ப்படுத்தும் விதமாக மதுரையில் தவெக தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பை விஜய் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சட்டசபைத் தேர்தல் 4 முனைப் போட்டி ஏற்படும் என்றும் பார்க்கப்படுகிறது. மதுரை மாநாட்டிலேயே இந்த அறிவிப்பை வெளியிடுவதோடு, அடுத்த கட்டமாக வேட்பாளர்கள் அறிமுகமும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications