பொய் பித்தலாட்டம் பேசி ஆட்சிக்கு வந்த பாஜக! நிர்வாகத்தில் படுதோல்வி! வேல்முருகன் கடும் சாடல்!
சென்னை: பொய் பித்தலாட்டம் பேசி பாஜக ஆட்சிக்கு வந்ததாகவும் ஆனால் நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்திருப்பதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் என அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பெட்ரோல் -டீசல்
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை நாளுக்குநாள் மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துகொண்டே வந்தாலும் கூட, இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் குறைவதற்கு பதிலாக, அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

விலை உயரும்
பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை மீதான விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதன் அடிப்படையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து,ரூ.102.16க்கும், டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து, ரூ.92.19-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு விலை ரூ.50 அதிகரித்து ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும்.

வாழ்வாதாரங்கள்
ஏற்கெனவே கொரோனாவால் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த விலையேற்றம் பொதுமக்களை மேலும் கடுமையாக பாதிக்கும். இந்த விலை உயர்வு, 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 11 நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசானது 2020 - 2021-ல் ரூ.40,915 கோடி இருந்த மானியத்தை வெறும் ரூ.12,995 கோடியாக சுருக்கியதோடு, சந்தைக்கேற்ப எரிவாயு விலையை தீர்மானித்து கொள்ளும் உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதும், ஒன்றிய அரசின் வரிவிதிப்பு கொள்கையுமே, இந்த விலையேற்றத்திற்கு அடிப்படைக் காரணம்.

பொய் பித்தலாட்டம்
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராளமாக சலுகைகளை அளிப்பதும், சாதாரண ஏழை, எளிய மக்களின் சேமிப்பை சூறையாடும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மிகக்கடுமையாக உயர்த்துவதுமான இரட்டை நிலை என்பதே ஒன்றிய பாஜக அரசின் அணுகுமுறையாக உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை வழங்குவேன், கருப்புப்பணத்தை மீட்டு வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்றெல்லாம் பொய் பித்தலாட்டம் பேசி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, தனது நிர்வாகம் அனைத்திலும் படுதோல்வியடைந்திருக்கிறது.

வேல்முருகன் சாடல்
எனவே, ஒன்றிய அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளை கண்டிப்பதோடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கைவிட வலியுறுத்தி, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். எரிவாயு விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுப்பதோடு, மானியத்தையும் உயர்த்தித் தரவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications