டென்ஷன் ஆன விஜய்.. “அரசு நிர்வாகத்தின் அலட்சியம்”.. கள்ளச்சாராய பலி சம்பவத்தால் கோபமாக ட்வீட்!
சென்னை: "இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது" என கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்துக்கு கடுமையாக கொந்தளித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், எழுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியாகியுள்ள இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்துள்ள தமிழக அரசு, மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி. ஆக இருந்த சமய் சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, புதிய எஸ்.பி ஆக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளதோடு, கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய அரசையும் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜய், "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த பதிவு தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications