திருட்டு வழக்கில் சிக்கிய பெண் தவெக இல்லை.. ஐடி விங் பதிவு.. களத்தில் குதித்த விர்ச்சுவல் வாரியர்ஸ்!
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நகைகளை திருடி கைதான பெண்ணுக்கும் தவெகவுக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அவர் திமுகவை சேர்ந்தவர் என்றும் தவெகவினர் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். திமுக கொடி கட்டிய காரின் முன்பாக அந்தப் பெண் நிற்கும் புகைப்படத்தை தவெக கட்சியினர் பகிர்ந்து திமுகவை விமர்சித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழவிளை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். விளவங்கோடு அடுத்த செருவலூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஷிதா டிப்னி. இவர் திண்டிவனத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார்.

அர்ஷிதா டிப்னி கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலியூர்சாலை ஊராட்சி தமிழக வெற்றிக் கழகத்தின் இணை செயலாளர் பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அர்ஷிதா டிப்னி பயிற்சிக்காக நாகர்கோவில் நீதிமன்றத்துக்கு வரும்போது, விஜயகுமாருக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று விஜயகுமாருக்கு வீட்டிற்கு அர்ஷிதா சென்றுள்ளார்.
பின்னார், அர்ஷிதா விஜயகுமார் வீட்டின் கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் விஜயகுமார், வீட்டுக்கு வெளியே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருக்க, 10 நிமிடம் கழித்து அர்ஷிதா சென்று விட்டார். அதன் பின்னர் விஜயகுமார் தாயார் அறையில் இருந்த 11.25 பவுன் தங்க நகைகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அர்ஷிதா தான் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அர்ஷிதா டிப்னியை போலீசார் கைது செய்தனர். தவெக பெண் நிர்வாகி, நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை திமுகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், தவெகவினர் இன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து திமுகவினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். நகைகளை திருடி கைதான பெண்ணுக்கும் தவெகவுக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அவர் திமுகவை சேர்ந்தவர் என்றும் தவெகவினர் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். திமுக கொடி கட்டிய காரின் முன்பாக அந்தப் பெண் நிற்கும் புகைப்படத்தை தவெகவினர் பகிர்ந்து திமுகவை விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "இந்த நபர் திமுகவைச் சார்ந்தவரே! தமிழக வெற்றிக் கழக இணைச் செயலாளர் நகைகளைத் திருடி கைதானார் என்ற பெயரில் ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் முழுக்க முழுக்க தவறானது. அவருக்கும் தவெகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நமது கழகத்தின் மாவட்ட செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பெண்மணி திமுகவைச் சார்ந்தவர் என்பது ஆதாரங்களோடு அம்பலம் ஆகியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் பலரும் இந்த பதிவை பகிர்ந்து திமுகவை கிண்டல் செய்து வருகின்றனர்.
அதற்கு பதிலடியாக, திமுகவினர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக போஸ்டரில் அர்ஷிதா டிபானி புகைப்படம் இடம்பெற்றிருப்பதைக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் திமுக - தவெக இடையே சமூக வலைதளத்தில் பிரளயமே வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications