காஞ்சிபுரத்தில் அண்ணா பற்றி பேசினால் போதுமா விஜய்.. அண்ணாவின் புகைப்படம் எங்கே? கோடீஸ்வரன் கேள்வி
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அண்ணாவின் புகழை பேசிய விஜய், அந்த அரங்கில் அண்ணாவின் புகைப்படத்தை வைக்காதது ஏன் என்று பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கேள்வி எழுப்பி இருக்கிறார். உள்ளரங்கு கூட்டத்தில் கூட தவெக தொண்டர்களுடன் விஜய் ஒரு செல்ஃபி எடுக்காமல் சென்றதையும் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் பாஸ் கொடுக்கப்பட்டு, க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம் தான் காஞ்சிபுரம். தன் வழிக்காட்டி என்பதால் அறிஞர் அண்ணாவை தாம் தொடங்கிய கட்சியின் கொடியில் வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அண்ணா ஆரம்பித்த கட்சியை தற்போது கைக்குள் வைத்திருப்பவர்கள் என்ன எல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அது மக்களுக்கு நன்றாக தெரியும். தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. காஞ்சிபுரத்துக்கும் எனக்கும் இயல்பாகவே தொடர்பு உள்ளது. தவெக முதல் அரசியல் பயணம் தொடங்கியது பரந்தூரில் இருந்துதான். இன்று மிகுந்த மனவேதனைக்கு பிறகும் நான் மக்களை சந்திக்கும் இடமும் காஞ்சிபுரம் தான் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் கோடீஸ்வரன் பேசுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணாவை பற்றி பேசும் விஜய், அண்ணாவுக்கு ஒரு போஸ்டர் வைக்காதது ஏன்? ஒரு பேனர் வைப்பதற்கு எவ்வளவு நேரமாகிவிடும். விஜய்க்கு அவ்வளவுதான் அரசியல் தெரியும். அதேபோல் விஜய்யால் திமுகவை மட்டுமே எதிர்க்க முடியும். பாஜகவை எதிர்க்க முடியாது.
ஏற்கனவே கரூர் வழக்கு சிபிஐ வசம் உள்ளது. இன்று தமிழிசை உள்ளிட்டோர் விஜய்யை கூட்டணிக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அதிமுகவையும் விஜய் விமர்சிக்க தொடங்கினால், அதனை தவெகவால் சமாளிக்க முடியாது. விஜய் எடுத்துள்ள ரூட் சரிதான். அதிமுகவை கடுமையாக விமர்சித்தால், அந்தக் கட்சியின் நிறுவனரான எம்ஜிஆர்ரை வைத்து அதிமுக பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications