அதிமுக பக்கம் தவெக போகாது.. விஜய் குறியே அதிமுக வாக்கு வங்கிதான்.. பத்திரிகையாளர் மணி கணிப்பு!
சென்னை: தவெக தலைவர் விஜய் இப்போதும் கூட கூட்டணிக்கு வருவார் என்று அதிமுக நம்பிக் கொண்டிருப்பதாக பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்யின் பேச்சை கேட்கும் போது அவர் அதிமுக கூட்டணியில் இணைய மாட்டார் என்றும், அவரின் இலக்கே அதிமுக வாக்கு வங்கிதான் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் விஜய், தீயசக்தி திமுக என்று ஆவேசமாக விமர்சித்தார். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்க முடியாது.. அதற்கெல்லாம் நேரம் இல்லை என்று விஜய் பேசியதோடு, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் குரலாகவும் விஜய் பேசி இருந்தார்.

விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியலில் விவாதமாகி இருக்கிறது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் மணி பேசுகையில், விஜய் இரு விஷயங்களை சரியாக செய்துள்ளார். அரசியலில் தன்னுடைய எதிரி யார் என்பதை நேரடியாக அறிவிக்க வேண்டும். அதேபோல் தன்னை சரியான இடத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் அதைதான் இன்று செய்திருக்கிறார்.
தீயசக்தி திமுக என்று எம்ஜிஆர், ஜெயலலிதா என்றோ பேசினர். அதனை விஜய் மீண்டும் பேசி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின் தீயசக்தி திமுக என்ற வார்த்தையை அதிமுகவினரே மறந்துவிட்டனர். அந்த பகைமை உணர்வு குறைந்துவிட்டது. தமிழக அரசியல் அந்த பகைமை இடத்தை நோக்கி விஜய் செல்கிறார். அது அவருக்கு தேர்தலுக்கு லாபத்தை கொடுக்கலாம்.
தமிழக அரசியலில் திமுக எதிர்ப்பை யார் அதிகம் பேசுகிறார்களோ, அவர்களுக்கு தான் அதிமுக சொந்தமாகி இருக்கிறது. அதேபோல் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை தொடர்ந்து பயன்படுத்துவேன் என்று கூறியதோடு, செங்கோட்டையனை பாராட்டிவிட்டு இன்னும் சில வரவிருக்கிறார்கள். அவர்களுக்கு மரியாதை அளிக்கப்படும் என்றார். இதன் மூலமாக விஜய் வலையை விரித்துள்ளார்.
அதிமுக வாக்கு வங்கியை குறி வைத்து செயல்படுவதால், இனியும் அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு தான். கடைசி வரை அதிமுக விஜய் கூட்டணிக்காக காத்திருப்பார்கள். ஏனென்றால் சட்டசபையிலேயே அதிமுக விஜய்க்கு ஆதரவு அளித்திருந்தது. இன்றைய விஜய்யின் பேச்சை பார்த்த பின், விஜய் அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு.
ஜெயலலிதாவின் இடத்தில் விஜய் தன்னை நிலைநிறுத்தி கொள்கிறார். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக டிஜிபி அலுவலகம் வரை சென்று அதிமுக புகார் அளித்தது. ஆனால் விஜய் விஷயத்தில் தேர்தல் கணக்கு உள்ளது. 2011ல் எப்படி அதிமுகவுக்கு விஜயகாந்த் தேவைப்பட்டாரோ, அதேதான் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று விஜய் தேவைப்படுகிறார்.
அதிமுகவுக்கு விஜய் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு தெரிந்து விஜய் அதிமுக பக்கம் வர மாட்டார். அப்படி வந்தாலும் விளங்காது.. விஜயகாந்த் சென்றபோது, ஜெயலலிதா இருந்தார். ஆனால் இன்று அப்படியான சூழல் இல்லை. விஜய் அதிமுகவின் வாக்கு வங்கியை குறி வைக்கிறார். திமுகவுக்கும் சில பாதிப்பு உள்ளது. பெண்கள், இளைஞர்கள் வாக்குகளை கவர்கிறார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications