இரட்டை இலை சின்னத்திற்கு மீண்டும் சிக்கலா? எடப்பாடி, ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சூரியமூர்த்தி ஆகியோர் வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் அன்றைய தினம் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் நடந்தன. சசிகலா சிறைக்கு சென்றது, எடப்பாடி பழனிசாமி முதல்வர் என அதிமுகவில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி வகித்தார். ஓ பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவி வகித்தார். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சினை எழுந்தது. டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஒரு அணியும், ஓ பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியுமாக பிரிந்தது. இதனால் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்பதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. இரட்டை இலை சின்னமும் முடங்கும் நிலைக்கு வந்தது. இதில் எடப்பாடி தலைமையில் அதிமுக செயல்பட தொடங்கியது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதிமன்றமும் கட்சியினர் விருப்பப்படி எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனது செல்லும் என்று கூறிவிட்டது.
பின்னர் அதிமுக எடப்பாடி தலைமையிலேயே செயல்பட்டு வருகிறது. எனினும் பழைய வழக்குகள் இன்னும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு வழக்கு தான் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்து இருந்தேன்.
உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று அவர் அளித்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சூரியமூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவு, அதற்கு பதில் கிடைத்ததாகவும், கூறினார். மேலும் இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது ஓ பிஎஸ் தரப்பில், "இந்த விவகாரத்தில் தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை எனவும் தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, சூரியமூர்த்தியின் மனு குறித்து 4 வாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இதில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து தான் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சூரியமூர்த்தி ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீஸில், வருகிற 19 ஆம் தேதி எடப்பாடி, ஓபிஎஸ், சூரியமூர்த்தி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினம் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications