உதயநிதி.. ஸ்டாலின்..துர்கா ஸ்டாலின் வரிசையாக பங்காரு அடிகளார் தரிசனம்.. காரணம் என்ன?
உதயநிதி, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் என வரிசையாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி-மருத்துவம்-பண்பாட்டு அறநிலைய தலைவர் பங்காரு அடிகளாரை சந்தித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
சென்னை: ஆன்மீக குருவான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளைத் தலைவர் பங்காரு அடிகளாரை திமுக தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருகின்றனர். உதயநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேரு, துர்கா ஸ்டாலின் என வரிசையாக சந்தித்து மரியாதை செலுத்தி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மிகப் பெரிய வழிபாட்டுத் தலமாக, ஆன்மீக மையமாக மாறியுள்ள மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவில் 1980களுக்கு முன்பு மிக மிக சாதாரணமாக இருந்தது. நடிகர் ராஜேஷ் -சரிதா நடிப்பில் இந்த ஆலயத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படம் வெளியானது.
அதன்பின் இந்த ஆலயத்தின் புகழ் வேகமாக நாடெங்கிலும் பரவவே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து. இன்று தனி ரயில்நிலையம், கல்லூரிகள், சிறப்பு ரயில்கள், என பலதரப்பட்ட வகையிலும் இப்பகுதி பிரபலமடைந்ததோடு இந்த ஆலயத்திற்கு அனைத்துமானவராக ஆதிபராசக்தியின் உருவமாக மாறியுள்ளார் பங்காரு அடிகளார்.

பங்காரு அடிகளார்
முன்னாள் அரசு ஊழியரான இன்றைய பங்காரு அடிகளார் பெயரில் வழிபாட்டு மன்றங்கள், தமிழகத்தில் மட்டுமின்றி நாடெங்கிலும் உள்ள பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். பல்வறு மாநிலங்களில் இந்தக் கோவிலுக்கு கிளைகள் உள்ளன. கிட்டத்தட்ட ஒரு வாக்கு வங்கி போல இவர்கள் உள்ளனர். ஆனால் இதுவரை இந்த பக்தர்களை யாரும் குறி வைத்து வாக்கு வேட்டையாடியதில்லை. அரசியல் சார்பற்றுத்தான் இதுவரை செவ்வாடை பக்தர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு பங்காரு அடிகளாருடன் நெருக்கமானார் டாக்டர் ராமதாஸ். இதன் மூலம் ஆன்மீக குருவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறதோ என்ற பேச்சு எழுந்தது. கடந்த ஆண்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தார்.

உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
இந்த நிலையில் கடந்த ஆண்டு சட்டசபைக்கு முன்பிருந்தே திமுகவின் முக்கிய தலைவர்கள் பங்காரு அடிகளாரை சந்தித்து வருகின்றனர். திமுக இளைஞரணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் பங்காரு அடிகளாரின் வீட்டிற்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின். அங்கு ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன் கோ.ப.அன்பழகன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.

பொன்னாடை போர்த்தி மரியாதை
அப்போது முதல்வர் ஸ்டாலின் தனது சார்பில் மஞ்சள் நிற பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். பதிலுக்கு பங்காரு அடிகளார் சிவப்பு நிற சால்வையை அணிவித்து வாழ்த்தினார். பங்காரு அடிகளார் குடும்பத்தினர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். அமைச்சர் கே.என்.நேரு தனியாக ஒருமுறை பங்காரு அடிகளாரை சந்தித்து பேசினார். அப்போது அவர் தரையில் அமர்ந்திருப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியது.

துர்கா ஸ்டாலின்
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்றைய தினம் துர்கா ஸ்டாலின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். அதனையடுத்து பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications