"திமுகவுக்கு எதிரான பலமான கட்சியே இல்லை.. அதிமுக தான் போட்டி".. தவெக-வை ஒதுக்கிய உதயநிதி ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான பலமான கட்சியே இல்லை. நீண்ட காலமாக எங்கள் பிரதான போட்டியாளராக இருக்கும் அதிமுக இப்போது பலவீனமாக இருந்தாலும், திமுகவின் எதிர்க்கட்சியாக அதிமுகவை மட்டுமே பார்க்கிறோம்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என தவெக தலைவர் விஜய் தொடர்ச்சியாக கூறி வருகிறார். இந்நிலையில், ஆங்கில நாளிதழுக்கு தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

udhayanidhi stalin dmk aiadmk

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், திமுகவுக்கு பலமான எதிரி இல்லை எனக் கூறியுள்ளார். நீண்ட காலமாக எங்கள் பிரதான போட்டியாளராக இருந்து வரும் அதிமுக தற்போது பலவீனமான நிலையில் இருந்தாலும், பிரதான போட்டியாக அந்தக் கட்சியை மட்டுமே திமுக கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆணவத்துடன் தமிழ்நாட்டிற்கு வருபவர்களை வீழ்த்துவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை முழுமையாக ஏற்பதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், பாஜக மற்றும் அதன் பி டீம்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், "திமுக கூட்டணி அனைத்து கட்சிகளின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு செயல்படும். முதலமைச்சர் ஸ்டாலின் ஜனநாயகத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர். அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செல்லும் பக்குவம் அவருக்கு உண்டு" என்று கூறியுள்ளார்.

என்.டி.ஏ கூட்டணியை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முடிவுகளை டெல்லி தலைமை எடுத்துவிட்டு, அதை அதிமுக மீது திணிக்கிறது. திமுக கூட்டணி அப்படிக் கிடையாது. எங்கள் முடிவுகள் அனைவரும் கூடி எடுப்பது. திமுக கூட்டணி கொள்கை ரீதியாக சேர்ந்தது" என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்றத்தன்மையை வீழ்த்த அனைத்து வழிகளையும் பாஜக பயன்படுத்தும் என்பதை அறிந்திருக்கிறோம். அக்கட்சியின் சூழ்ச்சியை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர் என்பதால் அவர்களை தமிழ்நாட்டு மக்களே வீழ்த்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய உதயநிதி, "முதல்வர் ஸ்டாலின் திமுக இளைஞர் அணியை துவக்கி நீண்டகாலம் வழிநடத்தியவர். அந்தவகையில் இளைஞர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து எதிர்காலத்திற்கு அவர்களை தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் புரிந்தே இருக்கிறார். கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க நான் குரல் கொடுப்பேன்." எனக் கூறியுள்ளார்.

திமுகவுக்கு வலுவான எதிரியே இல்லை என்ற உதயநிதி ஸ்டாலினின் கருத்து, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளுக்கு நேரடியாக சவால் விடுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, அதிமுகவை மட்டுமே பிரதான போட்டியாளராக கருதுவதாக உதயநிதி கூறி இருப்பது தவெக தலைவர் விஜய்யை சீண்டுவதாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+