ரெய்டா?.. முடிஞ்சா என் வீட்டுக்கு வாங்க.. விசுவாசம் அஜித் பாணியில் அட்ரஸை சொன்ன உதயநிதி.. பரபரப்பு!
சென்னை: தன்னுடைய வீட்டு விலாசத்தை கொடுத்து, முடிந்தால் ரெய்டு நடத்தும்படி வருமான வரித்துறைக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
இன்று காலையில் இருந்து சென்னையில் உள்ள ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 6 மணி நேரமாக சோதனை நடந்து வருகிறது.
கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. அதோடு சோதனை நடக்கிறது. திமுகவினர் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டு நடக்கிறது.

கண்டனம்
திமுக தலைவர்கள் பலர் இந்த சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தோல்வி பயத்தில் இப்படி செய்கிறார்கள். இந்த ரெய்டுதான் எங்களுக்கு எழுச்சியை கொடுக்கும். இதை எல்லாம் பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் இந்த பிரச்சாரத்தில் ரெய்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினும் மடத்துக்குளத்தில் நடந்த பிரச்சாரத்தில் ரெய்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில், என்னோட தங்கச்சி வீட்டுக்கு ரெய்டு போய் இருக்கிறார்கள். என் தங்கச்சி செந்தாமரை வீட்டுக்கே இன்று காலையில் திடீரென ரெய்டு சென்றுள்ளனர். நீங்க ரெய்டு போனது எல்லாம் இருக்கட்டும்.. இப்போது நான் உங்களுக்கு நேரடியாக சவால் விடுறேன்.

ரெய்டு
நீ அங்க ரெய்டு போன மாதிரி என் வீட்டுக்கு ரெய்டு வா. என் வீட்டு அட்ரஸ் கொடுக்கிறேன். எழுதி வச்சிக்கோ, 25/9, செனடாப் ரோடு, சித்தரஞ்சன் சாலை, சென்னை. இந்த அட்ரஸ் இருக்கிற வீட்டுக்கு வா. தைரியம் இருந்தா வீட்டுக்கு வந்து ரெய்டு பண்ணு. வா உனக்கு நான் எங்க வீட்டுல என்ன இருக்குனு காட்டுறேன், என்று விசுவாசம் அஜித் பாணியில் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டார்.

அச்சம்
மேலும் பேசிய அவர், உங்களை பார்த்து அஞ்சுவோம் என்று நினைக்க வேண்டாம். இதை எல்லாம் பார்த்து, கடந்து வந்த இயக்கம்தான் திமுக. அமித் ஷாவை பார்த்து பயப்பட மாட்டேன். அவரை பார்த்து பயப்பட நான் அதிமுக கிடையாது. நான் திமுக காரன்.

எடப்பாடி பழனிச்சாமி
உங்கள் காலில் விழ நான் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. நான் உதயநிதி ஸ்டாலின். நான் கலைஞர் பேரன். என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. நான் பயப்பட மாட்டேன், என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
