ட்விஸ்ட்! கொஞ்ச நாள் வந்து தங்க போறேன்.. மொத்தமாக "ஷிஃப்ட்" ஆகும் உதயநிதி.. திடீர்னு ஏன் இப்படி?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் அடுத்த கட்ட அரசியல் திட்டங்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளன.
எதிர்பார்த்ததை விட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஆளும் திமுக பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகப்பெரிய வீழ்ச்சியை, சவுக்கடியை கொடுத்துள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது.
952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது. பெரும்பான்மையான நகராட்சி சேர்மேன், பேரூராட்சி சேர்மேன் பதவிகளையும் திமுகதான் கைப்பற்றி உள்ளது.

உதயநிதி பர்ஃபார்மன்ஸ்
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் பர்ஃபார்மன்ஸ் பார்த்து திமுக தலைமை செம குஷியில் இருக்கிறதாம். ஏனென்றால் முதல்வர் ஸ்டாலின் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேரடி பிரச்சாரம் செய்யவில்லை. ஆன்லைன் பிரச்சாரம் மட்டுமே ஸ்டாலின் செய்தார். மற்றபடி திமுக தலைவர்கள் செய்த மேடை கூட்டங்கள் எதுவும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. உதயநிதி ஸ்டாலின் செய்த ஜீப் பிரச்சாரம்தான் மிக அதிக அளவில் கவனத்திற்கு உள்ளானது.

கவனம்
முக்கியமாக டேபிளுக்கு மேல பாருங்க என்று எடப்பாடி பழனிசாமியை கலாய்த்தது தொடங்கி ஆட்சி மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் உதயநிதிதான் மக்கள் முன்னிலையில் சென்று பதில் அளித்தார். ஒருவகையில் உதயநிதிக்கு கட்சிக்குள் இமேஜ் புதிய உயரம் தொட்டுள்ளது. லோக்சபா, சட்டசபை தேர்தல் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று உதயநிதி தொட்டதெல்லாம் பொன் என்று சொல்லும் அளவிற்கு வரிசையாக அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து உள்ளார்.

பாராட்டு
இந்த நிலையில் நேற்று அமைச்சர்களை, நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அமைச்சர்கள், எம்எல்ஏக்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். செந்தில் பாலாஜி கையை குலுக்கி சிரித்த முகத்தோடு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல்தான் உதயநிதி ஸ்டாலினுக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து வாழ்த்தி இருக்கிறார். அவரின் தேர்தல் பணிகளை பாராட்டும் வகையில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஸ்டாலின் சந்திப்பு
இந்த நிலையில் திமுகவில் விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி பற்றி ஆலோசனை செய்யப்படும். அதேபோல் எந்தெந்த மாவட்டங்களில் திமுக சரிந்ததோ அங்கெல்லாம் நிர்வாகிகள் மாற்றம் நடக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால்.. ஆனால்.. ஒரு சில துறைகள் சில அமைச்சர்களிடம் இருந்து பிடுங்கப்படும்.

அமைச்சரவை மாற்றம்
பல துறைகள் இப்படி பிடுங்கப்பட்டு அந்த துறைகள் அப்படியே புதிய சில அமைச்சர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது 110% உறுதி என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு தேர்தல் எதுவும் இல்லை. இப்போதே அமைச்சரவையில் தேவையான மாற்றங்கள் செய்யலாம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாகவும்.. உதயநிதிக்கு கண்டிப்பாக பதவி வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

கோவைக்கு செல்கிறார்?
அதோடு அமைச்சரான பின் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு சில நாட்கள் ஷிப்ட் ஆகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோவையில் திமுக வென்றுவிட்டது. கொங்கு மண்டலத்தையே திமுக பிடித்துவிட்டது. இந்த வெற்றியை அங்கு தக்க வைக்கும் விதமாக உதயநிதியை சில காலம் கோவைக்கு தலைமை ஷிஃப்ட் செய்யச் சொல்ல போவதாக தகவல்கள் வருகின்றன. அடுத்த லோக்சபா தேர்தலை மனதில் வைத்து திமுக இந்த மூவை கையில் எடுக்க போவதாக தெரிகிறது.

கோவை பற்றி பேசிய உதயநிதி
மேலும் எஸ்பி வேலுமணி மீது இனிதான் சில வழக்குகளில் ஆக்சன் எடுக்கப்படும். அப்போது அங்கு அதிமுக மொத்தமாக சரியும். அதை பயன்படுத்தி உதயநிதியை அங்கு களமிறக்கும் முடிவில் திமுக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் சில மேடைகளில் கோவைக்கு ஷிஃப்ட் ஆகும் தனது ஆசையை.. கொஞ்ச நாள் வந்து இங்கே தங்குவேன் என்று தெரிவித்து இருக்கிறார். அந்த ஆசை இந்த முறை கண்டிப்பாக நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது... தேர்தல் முடிந்துவிட்டது.. இனிதான் நிறைய காட்சிகள் மாற போகின்றன.. எதிர்பார்க்காத பல திருப்பங்கள் வர போகின்றன என்று கூறப்படுகிறது!












Click it and Unblock the Notifications