“டுவிஸ்ட்”.. சாரி சொன்ன உதயநிதி! நீங்க நினைக்குற மாதிரி இல்ல - சனாதனத்துக்கு ஜனாதிபதியே உதாரணமாம்
சென்னை: சனாதன தர்மம் தொடர்பான பேச்சுக்கு பாஜகவினரின் எதிர்வினை தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் சாரி என்று சொல்லி அதற்கு விளக்கத்தையும் அளித்து உள்ளார். எதற்கு சாரி சொன்னார் உதயநிதி? விரிவாக பார்ப்போம்.
சென்னையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சமீபத்தில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நமது மரியாதைக்குரிய ஜனாதிபதி திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை.

இதுதான் தற்போதைய சிறந்த உதாரணம். நன்றி." என்று சொன்னார். அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர், "நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?" என்று கேட்க, உதயநிதியோ, "யாராவது என்னிடம் மன்னிப்பு கேட்டார்களா?" என்று வினவினார். உடனே செய்தியாளர், "அவர்கள் உங்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள்." என்றார்.
இதனை கேட்ட உதயநிதி ஸ்டாலின், "இல்லை, சாரி" என்று சொன்னார். பின்னர் ஒரு நொடி சுதாரித்துவிட்டு, "இந்த சாரி அவர்களிடம் மன்னிப்பு கேட்க இல்லை. உங்களிடம் சொல்கிறேன்." என செய்தியாளரிடம் தெரிவித்தார். இதன் மூலம் சனாதன தர்மம் குறித்த பேச்சில் இருந்து உதயநிதி பின் வாங்கவில்லை என்று தெரிகிறது.
சென்னையில் கடந்த சில நாட்கள் முன்பாக சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை கடுமையாக விமர்சித்தார்.
"கொசு, டெங்கு, ஃப்ளூ, மலேரியா போன்ற நோய் சனாதனம். அதை அழிக்க வேண்டும்." என்றார். ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டு உள்ள அவர், "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள்.
விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம். இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள்.
தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் உதயநிதி இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததாக கூறி அவருக்கு இந்துத்துவாவினர், பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி பலரை அவரை கண்டித்து உள்ளனர். அயோத்தி சாமியார் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டங்களும், ஊர்வலங்களும் வட மாநிலங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications