உதயநிதி மு.க.ஸ்டாலின் எனும் நான்... மாண்புமிகு இளைஞர் நலத்துறை அமைச்சர்... மே 7-ல் பதவியேற்பு?
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வமான புதிய அதிகார மையமாக அடுத்த சில நாட்களில் உருவெடுக்க இருக்கிறார் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறும் மே 7-ந் தேதியன்று உதயநிதி ஸ்டாலின், அமைச்சரவையில் சேர்க்கப்படுவது உறுதியாகி உள்ளது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
திராவிடர் இயக்கம் என்பது குடும்பம் குடும்பமாக இயக்கம், கட்சிகளுக்காக பாடுபட்டு வருகிறது. அதேநேரத்தில் கட்சிப் பதவிகளில் வாரிசுகளை திணிப்பதற்கு தொடக்க காலங்களில் ஒருவித தயக்கத்தையே தலைவர்கள் வெளிப்படுத்தினர். திராவிடர் கழகத்தை தமக்கு பின்னால் தமக்கு குடும்பத்தாரிடம் ஒப்படைக்க மறுத்தார் தந்தை பெரியார். அதனாலேயே அவரது குடும்பத்தினர் அதிருப்தி அடைந்து சண்டை போட்டு பிரிந்த வரலாறு உண்டு. பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள் கட்சி அரசியலுக்கு நுழையவே இல்லை. அதேநேரத்தில் வெளியே தெரியாத அளவுக்கு இயக்கத்துக்காக, திமுக எனும் கட்சிக்காக குடும்பம் குடும்பமாக பாடுபட்டும் வந்தனர்.

திமுக ஸ்டாலின்
1970,1908களில் இந்த நிலைமை மெல்ல மெல்ல மாறியது. தற்போது திராவிடர் கழகமானாலும் திமுகவானாலும் வாரிசுகளுக்கு பதவிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தற்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சுமார் 40 ஆண்டுகாலமாக கட்சிப் பணிகளில் படிப்படியாக முன்னேறி, மேயர், எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதல்வர் என ஒவ்வொரு நிலையாக கடந்து வந்தவர்.

ஆட்சியில் திமுக
10 ஆண்டுகாலம் கழித்து திமுக கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. அப்போது கொரோனா பரவல் காலமாக இருந்ததால் திமுக இந்த இமாலய சரித்திர வெற்றியை கொண்டாடித் தீர்க்க முடியாதவர்களாக தவித்தனர். இப்போது ஓராண்டை நிறைவு செய்கிறது திமுக அரசு. ஓராண்டு நிறைவு கொண்டாட்டங்களுக்கு திமுக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். அத்துடன் திமுகவினரின் நீண்டகால எதிர்பார்ப்பு ஒன்றையும் பூர்த்தி செய்தாவது என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறது அக்கட்சித் தலைமை.

அமைச்சராகும் உதயநிதி
திமுக ஆட்சியின் முதலாண்டு நிறைவின் போது அக்கட்சியின் எதிர்காலம் என நம்பிக்கையுடன் போற்றப்படுகிற உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக்கப்படுவார் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு. உதயநிதியை வெறும் அமைச்சராக்குவது என்பதுடன் மட்டுமல்லாமல் குடும்ப ரீதியாகவும் அவருக்கான கூடுதல் அதிகாரங்கள், பங்குகள் ஒதுக்கீடும் அதே நாளில் வழங்கப்பட இருக்கிறதாம். அதேநேரத்தில் உதயநிதியின் அமைச்சரவை இலாகா குறித்து சர்ச்சை, அதிருப்தி வரக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறதாம்.

என்ன இலாகா?
திமுக ஆட்சி அமைந்ததுமே சீனியர்கள் சிலருக்கு பசையான துறைகள் ஒதுக்கப்படவில்லை என்கிற ஆதங்கம் இன்னமும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மிக முக்கியமான துறையை உதயநிதிக்கு ஒதுக்குவதை தவிர்க்க நினைக்கிறதாம் திமுக தலைமை. அதனால் இளைஞர் நலன் போன்ற துறைகளை ஒதுக்கி அவரது செயல்பாடுகளை மெருகேற்றலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறதாம். இதனை திமுகவின் பெரும்பாலான தரப்பும் ஒப்புக் கொண்டிருக்கிறதாம். அதனால் மே 7-ந் தேதி உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுவது உறுதி என்றே திமுகவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications