பர்த்டே அன்னைக்கும் இந்த விஷயத்தை மறக்காத உதயநிதி.. ஆளுநருக்கு வைத்த முக்கிய கோரிக்கை..!
உதயநிதி ஸ்டாலின் நீட் மசோதா குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "நீட் தேர்வு மசோதா, சட்டமன்றத்தின் முடிவு மாநில மக்களின் கருத்து. அதை மதித்து ஆளுநர் தன் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
கடந்த எம்பி தேர்தலின்போதும்சரி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போதும் சரி, அனிதாவின் பெயரை தமிழகமெங்கும் உச்சரித்து கொண்டே வந்தவர் உதயநிதி.
"அனிதாவை ஞாபகம் இருக்கா? அனிதாவை கொன்றவர்கள்தான் மோடி, இபிஎஸ், ஓபிஎஸ்.. இவங்களுக்கு தண்டனை வேண்டுமா? வேண்டாமா?.. டாக்டராக வேண்டிய அனிதா மரணமடைந்து விட்டார்... அதற்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டமா? என்றும் ஓபனாக பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியவர்.

அனிதா
அதுமட்டுமல்ல, அரியலூர் எப்போது சென்றாலும் சரி, செந்துறையை அடுத்த குழுமூரில் அனிதாவின் நினைவு நூலகத்திற்கு சென்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.. தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்களை அனிதா நினைவு நூலகத்துக்கு தினசரி வரும் மாணவர்களுக்கு பரிசாக வழங்குவார்.. ஒருமுறை அந்த நூலகத்திற்கு அருகில் தென்னங்கற்றையும் நட்டுவைத்து விட்டு வந்தார்..

முதல் சட்டப்பேரவை பேச்சு
இதையடுத்து, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய முதல் பேச்சை சட்டப்பேரவையில் பேசியிருந்தார்.. அப்போதுகூட, நீட் தேர்வு பிரச்சனையைதான் தன்னுடைய முதல் உரையிலேயே வலியுறுத்தினார்.. "நீட் தேர்வு, கட்சி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது, அனைத்து கட்சியினரும் பாதிக்கப்படுகின்றனர்... அதனால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்..

கோரிக்கை
நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுத்து சென்று அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்...! எல்லாரும் சேர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம்.. நீட் ஒழிப்பு போராளி அனிதா பெயரை அரசு மருத்துவ கல்லூரிக்கு அரியலூருக்கு சூட்ட வேண்டும்" என்று முக்கிய கோரிக்கையையும் விடுத்திருந்தது பெரும் கவனத்தை அன்றைய தினம் ஈர்த்திருந்தது. இந்நிலையில், இன்றும் நீட் விவகாரம் குறித்து ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

ஆளுநர்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா, கடந்த செப்டம்பர் 13-ம் தேதி பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, அன்றைய ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்துக்கு அன்றைய தினமே மசோதா அனுப்பிவைக்கப்பட்டது... ஆனால், அதுதொடர்பாக பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்கவில்லை... இந்த சூழலில்தான், தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பொறுப்பேற்றார்.

சந்திப்பு
எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் என்று கோரி, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநரிடம் கடந்த அக்டோபர் 13-ம் தேதி கோரிக்கை வைத்துவிட்டும் வந்தார்.. ஆனாலும், அந்த சட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது. அதனால், இன்று மீண்டும் ஆளுநரை நேரில் சந்தித்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனே அனுப்பிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்..

ட்வீட்
இதைதான் ட்வீட் போட்டு தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.. "நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு தரும் சட்ட முன்வடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் வலியுறுத்திய மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் முயற்சி வெல்லும். சட்டமன்றத்தின் முடிவு மாநில மக்களின் கருத்து. அதை மதித்து ஆளுநர் தன் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications