Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்வி நிலையங்களில் சாதி பாகுபாடுகளை களைய யுஜிசி புதிய ரூல்ஸ்! எதிர்க்கும் பிராமண அமைப்புகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக UGC புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய விதிமுறைகளை மாற்றி, 2026 ஜனவரியில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு (UGC).

யுஜிசி 2026 சமத்துவ விதிமுறைகள் எனப்படும் இந்த விதிமுறைகள் கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. சாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக இந்த விதிமுறைகள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.

இந்த விதிமுறைகள், கல்வி வளாகங்களில் சமவாய்ப்பு மையங்களையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), பெண்கள், பட்டியல் சாதியினர் (எஸ்சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட சமத்துவக் குழுக்களையும் அமைப்பதை கட்டாயமாக்குகின்றன. பாகுபாட்டைக் கையாள்வதற்கான "முக்கியச் சீர்திருத்தம்" என யுஜிசி இதைப் பார்த்தாலும், அறிவிக்கப்பட்ட உடனேயே உயர் சாதியினர் குழுக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

UGC collage

இப்போது இருக்கும் யூஜிசி விதிமுறை சொல்வது என்ன?

2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளின்படி, ஒரு மாணவர் சாதி ரீதியிலான பாகுபாட்டிற்கு உள்ளானார் என்றால் அதில் விசாரணைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் சாதி பாகுபாட்டை களைய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பார். மேலும் இது தொடர்பாக புகார்களை அளிக்க அதற்கான மையம் இருக்க வேண்டும். இவை பெரும்பாலும் எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) மாணவர்களுக்கான பாதுகாப்பை முக்கியமாக கருதின. மற்ற இடைநிலை சாதிகளுக்கு இதில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

ஒரு புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது 60 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால், இந்த அமைப்பிடம் பெரிய அதிகாரம் இல்லை. உதாரணமாக தவறான புகார்களுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. நிறுவன ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெரிய அளவில் இடம்பெறவில்லை.

2026-ல் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

புதிய 2026 விதிமுறைகளின்படி, முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பாலின சிறுபான்மையினர் (Gender Minorities) ஆகியோரும் இந்தப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மேலும், இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் பொருந்தும். இதற்காக 'சமத்துவக் குழு' என்ற Equity Committee உருவாக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட தங்களுக்கு சாதிய பாகுபாடு காட்டப்பட்டால் புகார் அளிக்கலாம்.

இப்போது, இந்த குழுவில் தனியாக ஒரு அதிகாரிக்கு பதிலாக, கல்வி நிறுவனத்தின் தலைவரே தலைமை தாங்கும் விதமாக விதி மாறி உள்ளது. முன்பு தனியாக இதற்கு அதிகாரி இருப்பார் இனி அப்படி இல்லை. இந்த குழுவில் மூத்த ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் இடம்பெறுவார்கள். பாதிக்கப்பட்ட யாரும் இந்த குழுவிடம் புகார் அளிக்கலாம். அந்த புகார்களை கண்காணிக்க இதில் உறுப்பினர்களும் இருப்பார்கள்.

கடுமையான காலக்கெடு மற்றும் தண்டனைகள்

புதிய விதிகளின் கீழ் புகார்கள் மீதான நடவடிக்கை மிகவும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குழு கூடி விவாதிக்க வேண்டும். 15 வேலை நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு 7 நாட்களுக்குள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை UGC இதை கண்காணிக்கும். ஆம்.. ஒவ்வொரு கல்லூரி, பல்கலைக்கழகமும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களுக்கான 'சமவாய்ப்பு மையம்' மற்றும் ஓபிசி, பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் கொண்ட 'சமத்துவக் குழு' ஆறு மாதத்திற்கு ஒருமுறை யுஜிசிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விதிகளுக்குக் கீழ்ப்படியாத கல்வி நிறுவனங்களின் நிதி முடக்கப்படலாம் அல்லது அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம். இது பழைய முறையைப் போல வெறும் ஆலோசனை அமைப்பாக இல்லாமல், அதிக அதிகாரம் கொண்ட சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்கள் சாதி பாகுபாடு

உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி ரீதியான பாகுபாடுகளைக் களைந்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதி பாகுபாடு புகார்கள் 118.4% அதிகரித்துள்ள நிலையில், பழைய விதிகள் போதுமானதாக இல்லை என்று யுஜிசி கருதுவதால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைகளும் விவாதங்களும்

இந்த விரிவான மாற்றங்கள் ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், மற்றொருபுறம் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளன. முக்கியமாக பாஜக ஆதரவாளர்கள் இடையிலேயே கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. முக்கியமாக முற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிராமண அமைப்புகள், பிராமண மகா சபா போன்ற இயக்கங்கள் இதை எதிர்த்து உள்ளன.

இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராகப் பொய்யான புகார்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், கர்னி சேனா, பிராமண மகாசபா, காயஸ்தா மகாசபா மற்றும் பல்வேறு வைசிய அமைப்புகள் "சவர்ண சமாஜ் ஒருங்கிணைப்புக் குழு" என்ற பெயரில் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் இந்த எதிர்ப்பு தீவிரமாக உள்ளது.

குறிப்பாக, 2012 விதிகளைப் போலவே இப்போதும் 'பொய்ப் புகார்களுக்கு' எதிரான தெளிவான தண்டனைகள் அல்லது பாதுகாப்பு வரம்புகள் வழங்கப்படவில்லை என்று பாஜக ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.

இதனால் கல்வி வளாகங்களில் ஒருவித அச்ச உணர்வு ஏற்படலாம் என்றும், இது நிர்வாக ரீதியான சிக்கல்களை உருவாக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

காஜியாபாத்தில் உள்ள தாஸ்னா பீடத்தின் தலைவர் யதி நரசிம்மானந்த் கிரி, யுஜிசி விதிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் பின்னர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டது.

பல முன்னேறிய சாதி அமைப்புகளின் செல்வாக்குமிக்க நபர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த விதிமுறைகளை "முன்னேறிய சாதியினருக்கு எதிரானது" என்று முத்திரை குத்தினர். முன்னேறிய ஜாதி குழுக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி சுவாமி ஆனந்த் ஸ்வரூப் வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு இந்த விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இருப்பினும், அதிகரித்து வரும் பாகுபாடுகளைத் தடுக்க இத்தகைய வலுவான சட்டங்கள் காலத்தின் கட்டாயம் என்று ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.புதிய விதிகளை நியாயப்படுத்தும் வகையில், யுஜிசி இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை வலியுறுத்த நாடாளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிட்டது. இந்த புள்ளிவிவரங்களின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு தொடர்பான புகார்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 118.4 சதவீதம் அதிகரித்துள்ளன. 2019-20-ல் 173 புகார்களே பதிவு செய்யப்பட்ட நிலையில், 2023-24-ல் இந்த எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில், 704 பல்கலைக்கழகங்கள் மற்றும் 1,553 கல்லூரிகளில் இருந்து மொத்தம் 1,160 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த புகார்களின் அதிகரிப்பை, தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் வலுவான பாதுகாப்புகளின் தேவைக்கான ஆதாரமாக யுஜிசி சுட்டிக்காட்டியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+