தமிழ் தேசியம் பெயரால் பாஜகவுக்கு சீமான் செய்யும் களப்பணிகள் இதோ--பட்டியல் தந்த திருமுருகன் காந்தி!
சென்னை: தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஈரோடு எதிர்கொள்ளும் அடிப்படை சிக்கல்களை மடைமாற்றி பெரியார் எதிர்ப்பு, குண்டு வீச்சு என பேசி பாஜகவுக்கு ஆதரவான களப்பணிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்து வருவதாக பட்டியலிட்டுள்ளார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.
இது தொடர்பாக திருமுருகன் காந்தி கூறியிருப்பதாவது: ஈரோடு எதிர்கொள்ளும் அடிப்படை சிக்கல்களாக இருப்பது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு. இதனால் ஈரோட்டின் சிறுகுறு தொழில்கள், வணிகம் பெரும் நெருக்கடியை சந்திக்கிறது. இதேபோல பருத்தி-நூல் விலையேற்றங்கள், பற்றக்குறை. பருத்திவிலையை கட்டுப்படுத்துவது குஜராத்-மாராத்திய மாநிலங்கள். இந்த மாநிலங்களே இந்தியாவில் அதிக பருத்தி உற்பத்தி செய்யக்கூடியவை. வெள்ளை தங்கம் எனப்படும் பருத்தியை மார்வாடிகள் பங்களாதேசத்திற்கு ஏற்றுமதி செய்வதால் கொங்கு மண்டலம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இதை மறைத்து சாதி-மதவாத பரப்புரைகளை பாஜக செய்து வருகிறது. ஈரோட்டின் பிரதான தொழில்களில் ஒன்றான தோல் தொழிலும் மோடி அரசால் நசுக்கப்பட்டது. இவையே இந்த தொகுதியின் அடிப்படை பொருளாதார சிக்கல்கள். இவற்றிற்கு காரணம் மோடி அரசின் கொள்கைகள்.

இச்சிக்கல்களை குறித்த விவாதம் எழாமல் பெரியார் நோக்கிய அவதூறுகளையும், பெரியார் சிலையை உடைப்போம், குண்டு வீசுவோம் எனவும் சீமான் பேசுவது என்பது அண்ணாமலைக்கு உதவியான பரப்புரை. இது இரண்டு உதவிகளை பாஜகவிற்கு செய்கிறது. முதலாவது பாஜகவின் தமிழர் தொழில் எதிர்ப்பு கொள்கை மீதான கோபத்தை மடைமாற்றுவது. மற்றொன்று பாஜகவிற்கு தேவையான பெரியார் அவதூறு பரப்புரை. பெரியார் மீதான சீமானின் அவதூறுக்கும், வன்முறை பேச்சிற்கும் கைது நடவடிக்கை பாய்ந்தால் அனுதாப ஓட்டுகளை பெற்று போராளியாகிவிடலாமென கனவு காண்கிறார் சீமான். சிறைசென்றாலும் பிணை வாங்க நீதிமன்றம் சென்றால் பாஜக ஆதரவு நீதிமன்ற தீர்ப்புகள் தனக்கு சாதகமாக, மாரிதாசுக்கு கிடைத்தது போல, கிடைக்குமென்பது அவரது கணக்கு.
தமிழ்த்தேசியத்தின் பெயரால் பாஜகவிற்கான களப்பணிகளை சீமான் செய்வதை போலி தமிழ்த்தேசியர்களும் கொண்டாடி வரவேற்கிறார்கள். தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டாலும் கவலைப்படாமல் தமது பெரியார் ஒவ்வாமை வெல்லவேண்டுமெனும் வெறியில் இயங்குகிறார்கள்.
திமுக இந்த அரசியல் போராட்டத்திற்குள் வருவதில்லை. அவர்களுக்கு பெரியாரும் தேவையில்லை, ஓட்டுகளை எப்பாடுபட்டாவது பெற்று வெற்றிபெற்றுவிட்டால் போதுமென்பதே அவர்களின் இலக்கு. பெரியார் குறித்து பேசி பரப்புரை அதிகம் மேற்கொள்ளக்கூடியவர்கள் பெரியாரிய தொண்டர்களே. இவ்வாறு திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications