உங்களுடன் ஸ்டாலின் வழக்கு.. அதிமுகவுக்கு விழுந்த சம்மட்டி அடி.. கொந்தளித்த திமுக வழக்கறிஞர் சரவணன்!
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அற்பத்தனமான அரசியலை செய்த அதிமுகவுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருப்பதாக திமுக வழக்கறிஞர் சரவணன் விமர்சித்துள்ளார். கொரோனா சான்றிதழில் மோடியின் புகைப்படம் இருந்தது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் போய்விட்டதா என்ற கேள்வி எழுப்பிய சரவணன், அதிமுக தாக்கல் செய்த வழக்கை தேவையற்ற வழக்கு என்பதால் அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுக சார்பாக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்பி சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த போது, அதிமுகவினர் தங்களின் வெற்றியாகக் கொண்டாடினார்கள்.

தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்று திமுக மீண்டும் வெற்றியை பெற்றுள்ளது. அதிலும் சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருப்பது அதிமுகவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சட்டத்துறை முன்னாள் அமைச்சராக இருந்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
திமுகவின் இந்த வெற்றிக்கு வழக்கறிஞர் வில்சன் மற்றும் முகுல் ரோஹ்தகி ஆகியோர் முன் வைத்த வாதங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. திமுக தரப்பில், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் விளம்பரங்களில் எந்த இடத்திலும் விதிமீறல் இல்லை. மக்கள் மத்தியில் திட்டத்தைக் கொண்டு சேர்க்க பிரதமர், முதல்வர் பெயர்கள் காலம் காலமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
முந்தைய அதிமுக ஆட்சியில் 20 திட்டங்களுக்கு அம்மா என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று வாதிட்டனர். இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள், சிவி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும். சிவி சண்முகத்தின் அபராதத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குத் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இதுதொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் சரவணன் பேசுகையில், அற்பத்தனமான அரசியலை செய்ய அதிமுக முனைந்தது. இது வெறும் விளம்பரம் கிடையாது. மக்களுக்கான நலத்திட்டம் இது.
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் திட்டம் செயல்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உயர்நீதிமன்றம் மூலம் முடக்கிவிடலாம் என்று பகல் கனவு கண்டனர். இப்போது உச்சநீதிமன்றம் அதிமுகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. ரூ.10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இதன் மூலமாக உச்சநீதிமன்றம், இது தேவையற்ற வழக்கு கூறிவிட்டது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் பெயர் இருந்தது, ரேஷன் கடையில் மோடி புகைப்படம் இல்லை என்று ஆந்திராவில் நிர்மலா சீதாராமன் சண்டை போட்டாரே.. இதெல்லாம் அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியாமல் போய்விட்டதா? அரசியல் செய்யலாம்.. அற்பத்தனமான அரசியலை செய்யக் கூடாது.. குறுக்கு வழியில் அரசியல் செய்ய நினைத்தால், இப்படிதான் தண்டனையாக அமையும்.
பாஜகவுடன் சேர்ந்து இப்படியொரு அரசியலை செய்யலாமா? பிரதமர் மோடியின் பெயரிலேயே திட்டம் இருக்கிறதே.. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று அதிமுக முயன்றிருப்பதாகப் பார்க்கிறேன். காழ்ப்புணர்ச்சி அரசியலை செய்ய முயன்ற அதிமுகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications