தனியார் டிவி விவாதங்களில் பங்கேற்காத அதிமுக, பாஜக.. என்ன பண்ணலாம்.. கைவசம் வேற பிளான் இருக்காமே!
சென்னை: தனியார் தமிழ் செய்தி சேனல்களில் நடைபெறும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக மற்றும் பாஜக பங்கேற்பதை தவிர்த்து வருகின்றன.
நெறியாளர்கள் தங்களை கட்டம் கட்டி கேள்விகள் கேட்கிறார்கள் , திமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதையடுத்து சமீப காலமாக இந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கிடையாது.
கட்சித் தலைமையே அறிக்கை வெளியிட்டு இவ்வாறு தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்பதை உறுதிபட தெரிவித்திருந்தன.

பாஜக, அதிமுக பங்கேற்கவில்லை
தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள் . எதிர்தரப்பில் கருத்து கூறுவதற்குதான் ஆள் இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது . நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பிற தரப்பினர் கருத்துக்களை கூறுகிறார்களே தவிர பாஜக மற்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் கிடைப்பது கிடையாது.

பின்னடைவு
ஆரம்பத்தில் இது நல்ல முடிவு என்று பாஜக மற்றும் அதிமுக கட்சி தலைவர்கள் நினைத்தாலும், இப்போது விவாத நிகழ்ச்சிகளில் தங்கள் தரப்புக்கு பதில் சொல்ல ஆளில்லை என்ற நிலை உருவாகி உள்ளது அவர்களுக்கு பின்னடைவாக பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

பொதிகை டிவியில் விவாதம்
இந்த நிலையில்தான் தனியார் டிவி சேனல்களுக்கு போட்டியாக தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் அரசியல் விவாத நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்கள் கட்சியின் கொள்கைகள் பற்றி பேசுவதற்கு பொதிகை டிவியில் அவகாசம் வழங்கப்படுவது வழக்கம். இதைத் தாண்டி மற்ற நாட்களில் பொதிகை தொலைக்காட்சியில் அரசியல் பேசுவது மிக மிக அபூர்வம். அரசு தொலைக்காட்சி என்பதால் பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் மிகவும் கவனமாக சர்ச்சைகளை தவிர்த்து விடுவார்கள் பொதிகை டிவி நிர்வாகத்தினர்.

சர்ச்சை தேவையில்லை
அதே நேரம் அனைத்துக் கட்சியினருக்கும் வாய்ப்பளித்து அரசியல் விவாத நிகழ்ச்சிகளை நடத்தலாம், சர்ச்சைகள் இல்லாமல் வெறும் விவாதம் என்ற அடிப்படையில் மட்டும் அவர்களை நடத்திச் செல்லலாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சகம்
மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் அது துறையின் இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் இந்த ஆலோசனைகள் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒருவேளை அப்படி அரசியல் விவாத நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது அதில் அதிமுக மற்றும் பாஜக பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1990கள் மாதிரி இல்லையே
அதேநேரம் இந்த வியூகம் அல்லது இந்த திட்டம் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது தெரியாது. என்னதான் அனல் பறக்க விவாத நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இழந்துபோன பார்வையாளர்களை தூர்தர்ஷன் மீட்டெடுப்பது என்பது அவ்வளவு சீக்கிரம் நடக்கக்கூடிய காரியம் இல்லை. 1990களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் அனைத்து இல்லங்களிலும் பார்க்கப்பட்டது. இப்போது டிடிஎச் அல்லது கேபிள் கனெக்சன் என எதிலுமே அந்த சேனலை அப்படியே தாண்டி வேறு சேனலுக்கு செல்கிறார்கள் பார்வையாளர்கள். காலத்துக்கு ஏற்ப அதன் வேகம் மாறாமல் இருப்பது இதற்கு முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது .

தூர்தர்ஷன் பிளான்கள்
ஒட்டுமொத்தமாக தூர்தர்ஷன் பணியாற்றும் விதத்தை காலத்திற்கேற்ப மாற்றாமல் அரசியல் விவாத நிகழ்ச்சிகளை நடத்தினால் மட்டும் பார்வையாளர்கள் அங்கு சென்று பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது என்கிறார்கள் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள். இந்த திட்டம் நடைமுறைக்கு வருமா அல்லது அதிமுக மற்றும் பாஜக தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிமுக அறிக்கை இதுதான்
முன்னதாக ஜூலை 12ம் தேதி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டிருந்த அறிக்கையில், தங்கள் முடிவை திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இதோ அவர்கள் அறிக்கையின் அம்சங்கள்: எம்ஜிஆரால் அடித்தட்டு மக்களுக்காகவும் அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட மாபெரும் பேரியக்கம் தான் அதிமுக. எம்ஜிஆர் ஆட்சியின் நீட்சியாக தன்னுடைய இறுதிக் காலம் வரை மக்களுக்காகவும், அதிமுகவுக்காகவும் வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவும் அதே எண்ணத்தோடு இயக்கத்தையும், தமிழகத்தையும் வழி நடத்தி இருக்கிறார்.

அதிமுக புகழுக்கு இழுக்கு
அதைப்போலவே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்த பாதையில் சிறிதும் தடம் மாறாமல் அரசியல் களத்தில் நாங்கள் பயணித்து வருகிறோம். மக்களின் அடிப்படைத் தேவைகள் தினசரி பிரச்சினைகள் பல இருக்கின்ற போது அதைப் பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் ஜனநாயகத்தின் அங்கங்களாக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள் அதிமுக புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம் போன போக்கில் ஊடக அறிக்கை தொடர்பாகவும், கட்சித் தலைவர்களுக்குக் களங்கம் ஏற்படுகின்ற விதத்திலும் விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துவது உள்ளபடியே மனதிற்கு வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

பங்கேற்பதில்லை
மேற்சொன்ன காரணங்களால் ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளும் செய்தித் தொடர்பாளர் கட்சியைச் சார்ந்தவர் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு யாரையும் வைத்துப் பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எனவே கட்சியின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாகக் கருத்துக்களைத் தெரிவிக்க அழைக்கவும், அனுமதிக்க வேண்டாம். வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் அன்பு கூர்ந்து கேட்டுக் கொள்கிறோம். இந்த முக்கியமான விவகாரத்தில் தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்களில் மேலான ஒத்துழைப்பை அன்புடன் எதிர்பார்க்கிறோம்" என அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
-
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications