Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீழடி vs ஆதிச்சநல்லூர்.. திமுகவிற்கு போட்டியாக களமிறங்கிய பாஜக.. நிர்மலா அறிவிப்பிற்கு என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பில் ஆதிச்சநல்லூரை இந்தியாவின் 15 முக்கிய தொல்பொருள் தளங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து, அதை ஒரு கலாச்சார மையமாக (Experiential Cultural Destination) மேம்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம், வெறும் அகழ்வாராய்ச்சித் தளமாக இருந்த ஆதிச்சநல்லூர், இனி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு சர்வதேச மையமாக மாறும்.

Adichanallur Keezhadi

ஆதிச்சநல்லூரில் இனி என்ன நடக்கும்?

மக்கள் நேரடியாக ஆய்வு பொருட்களை பார்க்கலாம்: அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதிகளை பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிடும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்படும். மக்கள் அந்த இடத்திலேயே பழங்கால நாகரீகத்தின் தடயங்களைக் காணலாம்.

டிஜிட்டல் ஆவணப்படுத்துதல்: 'தேசிய டிஜிட்டல் அறிவு கட்டமைப்பு' (National Destination Digital Knowledge Grid) மூலம் ஆதிச்சநல்லூரின் வரலாறு டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.

அருங்காட்சியகம்: ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட ஆன்-சைட் அருங்காட்சியகப் பணிகள் வேகமெடுக்கும். இங்கு பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே கண்ணாடிப் பெட்டிகளுக்குள் வைத்து காட்சிப்படுத்தப்படும்.

பயிற்சி பெற்ற வழிகாட்டிகள்: சுற்றுலாப் பயணிகளுக்குச் சரியான வரலாற்றுத் தகவல்களை வழங்க, ஐஐஎம் (IIM) மூலம் பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் நியமிக்கப்படுவார்கள்.

கீழடி குறித்து அறிவிப்பு இல்லாதது ஏன்?

பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் இடம்பெற்றிருந்தாலும், தமிழர்களின் முக்கிய நகர நாகரீக அடையாளமான கீழடி விடுபட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன:

நிர்வாகக் காரணம்: கீழடி தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறை (TNSDA) கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் (ASI) அதன் ஆரம்பகட்டப் பணிகளுடன் விலகிக்கொண்டது. எனவே, இது மாநில அரசின் திட்டமாகப் பார்க்கப்படுவதால் மத்திய பட்ஜெட்டில் நேரடியாக இடம் பெறவில்லை. இங்கே ஏற்கனவே மியூசியம் தமிழக அரசால் கட்டப்பட்டுவிட்டது.

அரசியல் முரண்பாடு: கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட மதச்சார்பற்ற நகர நாகரீகம் குறித்த முடிவுகளுக்கும், மத்திய பாஜக அரசின் வரலாற்றுப் பார்வைக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அங்கே இந்து மத அடையாளங்கள் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே கீழடியை விட ஆதிச்சநல்லூருக்கு திடீரென மத்திய அரசு முக்கியத்துவம் தரலாம் என்று கூறப்படுகிறது. கீழடிக்கு போட்டியாக ஆதிச்சநல்லூரை பாஜக முன்னிறுத்த பார்க்கலாம்.

மத்திய அரசு ஆதிச்சநல்லூர் பணிகளை முடக்க முயற்சி செய்ததா?

ஆனால் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், ஆதிச்சநல்லூர் பணிகள் பல்வேறு தடைகளைச் சந்தித்துள்ளன:

15 ஆண்டு கால தாமதம்: 2004-2006-ல் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடந்தும், அதன் முடிவுகளை வெளியிடாமல் ASI சுமார் 15 ஆண்டுகள் கிடப்பில் போட்டது. இது ஒரு வரலாற்றை மறைக்கும் முயற்சி என்று வரலாற்று ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டது. பாஜக ஆட்சியிலும் கூட இதன் முடிவுகள் வெளியிடப்படாமல் 2014ல் இருந்து 2019 வரை முடக்கப்பட்டது.

நீதிமன்றத் தலையீடு: 2019 ஏப்ரல் மாதம் மதுரை உயர்நீதிமன்றம் தலையிட்டு கண்டனம் தெரிவித்த பிறகே, ஆதிச்சநல்லூரின் கரிமக் காலக்கணிப்பு (Carbon Dating) முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போதுதான் ஆதிச்சநல்லூர் கி.மு. 905 முதல் கி.மு. 696 வரையிலான பழமையான தளம் என்பது உறுதியானது.

கீழடிக்கு முக்கியத்துவம்: இப்படிப்பட்ட நிலையில்தான் கீழடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு அதில் சிக்ஸர் அடித்தது. அங்கே அமைக்கப்பட்ட மியூசியம் பெரிய வரவேற்பை பெற்றது. திமுக இதில் மக்கள் இடையே பெரிய அளவில் ஸ்கோர் செய்தது. இதை உணர்ந்து மத்திய அரசு ஆதிச்சநல்லூர் பகுதியை "ஐகானிக் சைட்" (Iconic Site) என்ற அறிவித்தது. தற்போது அதன் அடிப்படையிலே இதை கலாச்சார மையமாக அறிவித்துள்ளது. தமிழக அரசின் கீழடி அஸ்திரத்திற்கு போட்டியாக ஆதிச்சநல்லூரை மத்திய அரசு எடுத்துள்ளது.

ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி ஆகிய இரண்டு முக்கிய தொல்லியல் தளங்களுக்கு இடையிலான ஒப்பீடு

1. என்ன மாதிரியான இடம்

ஆதிச்சநல்லூர்: இது ஒரு ஈமக்காடு (Funerary Site). அதாவது, இறந்தவர்களைப் புதைத்த இடமாகும். இங்கு ஆயிரக்கணக்கான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடி: இது ஒரு வாழ்விடப் பகுதி (Urban Settlement). மக்கள் வாழ்ந்த வீடுகள், தெருக்கள் மற்றும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் இங்கு கிடைத்துள்ளன.

2. காலக்கட்டம் (Timeline)

ஆதிச்சநல்லூர்: இது இரும்புக்காலத்தைச் (Iron Age) சேர்ந்தது. இதன் காலம் சுமார் கி.மு. 905 முதல் கி.மு. 696 வரை என அறிவியல் பூர்வமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

கீழடி: இது சங்க காலத்தைச் சேர்ந்தது. இதன் காலம் சுமார் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு (கி.மு. 580) என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் சங்க காலத்திற்கும் இடையே இருந்த இடைவெளியை நிரப்புகிறது.

3. புவியியல் அமைப்பு (Geography)

ஆதிச்சநல்லூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது தென்தமிழகத்தின் கடல்சார் வணிகத் தொடர்புகளுக்கு மிக அருகில் உள்ளது.

கீழடி: சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் (மதுரைக்கு அருகில்) அமைந்துள்ளது. இது ஒரு செழிப்பான ஆற்றுச்சமவெளி நாகரிகமாகும்.

4. முக்கிய கண்டுபிடிப்புகள் (Key Discoveries)

ஆதிச்சநல்லூர்: வெண்கலத்தால் ஆன விலங்கு உருவங்கள், இரும்பு ஆயுதங்கள் (வாள், ஈட்டி), தங்க நெற்றிப்பட்டங்கள் மற்றும் நெல் உமியுடன் கூடிய முதுமக்கள் தாழிகள்.

கீழடி: செங்கல் கட்டுமானங்கள், கழிவுநீர் கால்வாய்கள், சுடுமண் குழாய்கள், தந்தத்தினால் ஆன பகடைகள், மற்றும் நெசவுத் தொழிலுக்கான தக்களிகள்.

5. முக்கிய வேறுபாடு

ஆதிச்சநல்லூர்: இங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு, அக்கால மக்கள் உலோகங்களை உருக்கிப் பிரித்தெடுப்பதில் (Metallurgy) வல்லவர்களாகவும், வீர மரபைக் கொண்டவர்களாகவும் இருந்ததை அறிய முடிகிறது.

கீழடி: இங்கு கிடைத்த தமிழ்-பாமிய (Tamil-Brahmi) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சாதாரண மக்களும் எழுத்தறிவு பெற்று விளங்கிய ஒரு மேம்பட்ட, மதச்சார்பற்ற நகர சமூகத்தை அடையாளம் காட்டுகின்றன.

6. முக்கியத்துவம்

ஆதிச்சநல்லூர்: தமிழர்களின் தொன்மையை இரும்புக்காலத்தின் தொடக்கத்திற்கே கொண்டு செல்கிறது. தமிழர்கள் மிக ஆரம்பத்திலேயே உலோகத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியதை இது உறுதி செய்கிறது.

கீழடி: இந்திய வரலாறு இனி கங்கைச் சமவெளியிலிருந்து அல்ல, வைகை ஆற்றங்கரையிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு வலிமையான நகர நாகரிகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+