இரண்டாக பிரியும் தமிழ்நாடு? உதயமாவது வட தமிழ்நாடு? கொங்குநாடு? நயினார் பற்றவைத்த வெடியால் பரபரப்பு
சென்னை: தமிழ்நாடு இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்படும்; தமிழகத்தில் இனி மாநில பிரிவினை கோரி போராட்டங்கள் நடைபெறும் என்று பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசியதை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அப்படி தமிழகம் பிரிக்கப்பட்டால் உருவாகப் போவது வட தமிழ்நாடா? கொங்குநாடா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
Recommended Video
நாடு விடுதலைக்கு முன்னர் தமிழ்நாடு தமிழருக்கே- திராவிட நாடு திராவிடருக்கே என முழக்கம் எழுந்த மண் தமிழகம். தந்தை பெரியார் தன்வாழ் நாள் லட்சியமாக தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். எமர்ஜென்சி வரை திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான விடுதலையின் முழக்கமே தமிழ்நாடு தமிழருக்கே என்பதுதான்.
1980களில் இடதுசாரி தத்துவார்த்த அடிப்படையில் தனித் தமிழ்நாடு கோரும் ஆயுதப் புரட்சியை தமிழரசன் முன்னெடுத்தார். அந்த போராட்டத்துக்கு ஈழப் போராளிகள் பின்னணியிலும் இருந்தனர். ஆனால் தமிழரசன் படுகொலைக்குப் பின்னர் தனிநாடு ஆயுதப் போராட்டம் இயக்கமாக முன்னெடுக்கப்படவில்லை. சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்த தமிழ்நாடு விடுதலைப் படையை சேர்ந்தவர்கள் தனிநாடு கோரிக்கையை உயிர்ப்பிக்க முயன்றனர். ஆனால் சந்தனக் கடத்தல் வீரப்பன் சகாப்தத்துடன் அந்த கோரிக்கை முடங்கிப் போனது.

ஆ.ராசா பேச்சு
இந்நிலையில் நாமக்கல் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அண்ணா வழியில் செல்லும் திமுகவை, மாநில சுயாட்சி கேட்கும் திமுகவை பெரியார் வழியில் தனி தமிழ்நாடு கோரும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என பேசினார். ஆ.ராசாவின் இந்த பேச்சு இப்போது பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழக பாஜகவினர் ஆ.ராசாவின் இந்த பேச்சை அப்படி ஒன்றும் எளிதாக விடுவதாகவும் இல்லை போல.

நயினார் நாகேந்திரன்
தமிழகம் முழுவதும் பாஜகவினர் இன்று தமிழக அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். பாளையங்கோட்டையில் நடந்த போராட்டத்தில் பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஆ.ராசாவின் பேச்சை சுட்டிக் காட்டினார். அத்துடன் தமிழகம் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும்; பாண்டிய நாடு (தென் தமிழ்நாடு), பல்லவநாடு (வட தமிழ்நாடு) என இரண்டாகப் பிரிக்கும் போராட்டங்கள் நடக்கும் என்றார்.

கொங்குநாடும் மத்திய அரசும்
பாஜகவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை நிச்சயமாக மாநிலங்களாகப் பிரித்துவிடும் என்கிற கருத்துகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டவைதான். மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது எல்.முருகன், கொங்குநாடு என மத்திய பாஜக அரசு குறிப்பிட்டது. அப்போது அதனை நியாயப்படுத்த பாஜகவினர் கொங்குநாடு தனி மாநில கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தினர். அண்மையில் கர்நாடகா அமைச்சர் ஒருவர் கூட, பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் இந்தியா 50 மாநிலங்களாகப் பிரிக்கப்படும் என்றார்.

உருவாவது என்ன மாநிலம்?
இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் பேச்சு பெரும் விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது. அப்படி தமிழகத்தை பாஜக பிரித்தால் தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு என இரு மாநிலங்கள் உதயமாக வாய்ப்பு இருக்கிறது என்கிறது ஒரு தரப்பு. ஆனால் கொங்கு நாடு மட்டும் தனி மாநிலமாக பிரியும்; அதுதான் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக கை கொடுக்கும் என்கிறது மற்றொரு தரப்பு. இப்படி மாநிலத்தை கூறு போட்டால் திமுக, அதிமுக என்கிற இரு கட்சி ஆட்சி முறைக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்; ஆகையால் பாஜகவின் தாமரை மலர இதைவிட்டால் வேறுவாய்ப்பே இல்லை என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டிருக்கிறது சமூக வலைதளங்களில்.












Click it and Unblock the Notifications