கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டனுக்கு மத்திய அரசு விருது- கமல்ஹாசன் வாழ்த்து
சென்னை: கோவை பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இரா. மணிகண்டனுக்கு மத்திய அரசு Best Water Warrior விருது வழங்கியுள்ளது. மத்திய அரசின் விருது பெற்றுள்ள இரா. மணிகண்டனுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், 'இவர்கள் நம் காலத்தின் நாயகர்கள்' என பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் 2017-ல் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக இரா. மணிகண்டன் செயல்பட்டு வருகிறார்.

கோவை நீர்நிலைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், நீர்வழித் தடங்களை மீட்பது உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி அடர்வனத்தையும் இந்த அமைப்பினர் உருவாக்கி உள்ளனர். இதில் 6,000 மரங்கள் உள்ளன.
நீர்நிலைகளின் கரைகளில் மூலிகை விதைகள், பனைமரங்கள் நடுதலையும் இந்த அமைப்பு மேற்கொள்கிறது. இப்பணிகளுக்கான மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், 2019-ம் ஆண்டுக்கான Best Water Warrior விருதை இரா. மணிகண்டனுக்கு வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த விருதைப் பெற்ற இரா. மணிகண்டனுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நீர் வள அமைச்சகத்தின் விருதைப் பெற்றுள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் இரா.மணிகண்டனுக்கு என் வாழ்த்துக்கள். நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் ஒரு சமூகமாக நாம் செய்து விட்ட பாவங்களுக்குப் பிரயாச்சித்தம் தேடும் மணிகண்டன் போன்றவர்கள் நம் காலத்தின் நாயகர்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications