திமுக எம்பிகளை காக்க வைத்துவிட்டு.. கனிமொழிக்கு போன் போட்ட அமித் ஷா.. "அன்று" நடந்தது என்ன? பரபரப்பு
சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு தான் போன் செய்து வாழ்த்து தெரிவித்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று குறிப்பிட்டார். திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில் இந்த போன் கால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றி தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது.
முன்னதாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு எம்பிக்கள் பலர் டெல்லியில் முயன்று வந்தனர். இதற்காக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழ்நாடு எம்பிக்கள் முயன்றனர்.

இரண்டு வாரமா
கடந்த டிசம்பர் கடைசி வாரம் தமிழ்நாடு எம்பிக்கள் குழு டெல்லி சென்றது. திமுக குழு தலைவர் எம்பி டி.ஆர். பாலு, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், விசிக தொல். திருமாவளவன், சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் உட்பட தமிழ்நாடு எம்பிக்கள் குழுவாக சென்றனர். ஆனால் அப்போது அமித் ஷாவை பார்க்க முடியவில்லை. அப்பாயிண்ட்மெண்ட் இருந்தும் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பல முறை முயன்றும் இந்த சந்திப்பு நடக்கவில்லை.

கோபம்
கடந்த மாதம் 8ம் தேதி இதை பற்றி கோபமாக பேட்டி அளித்த டி ஆர் பாலு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை சட்டமாக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். ஆளுநர்தான் அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் அனுப்பவில்லை. இது சட்ட விதிப்படி தவறு. ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார். நீட் விலக்கு மசோதா சட்டம் ஆகாமல் இருக்க ஒரே காரணம் ஆளுநர் ஆர்என் ரவி. அவர் செய்த தவறு இது. தனது அவருக்கு அவர் பொறுப்பேற்று அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று கோபமாக தெரிவித்தார்.

சந்திப்பு
அதன்பின் ஒரு வழியாக கடந்த மாதம் 17ம் தேதி நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்து மனு அளித்தது. இரண்டு வாரத்திற்கும் மேல் காத்திருந்து அமித் ஷாவை தமிழ்நாடு எம்பிக்கள் சந்தித்தனர். தமிழ்நாடு எம்பிக்களை அமித் ஷா காக்க வைத்த அதே காலகட்டத்தில் அவர் திமுக எம்பி கனிமொழிக்கு போன் செய்ததாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

போன் செய்தார்
அதாவது தமிழ்நாடு எம்பிக்கள் காக்க வைக்கப்பட்ட அதே ஜனவரி முதல் வாரத்தில் ஜனவரி 5ம் தேதி திமுக எம்பி கனிமொழிக்கு அமித் ஷா போன் செய்துள்ளார். கனிமொழி பிறந்த நாள் அன்று. இதற்கு மரியாதை நிமித்தமாக அமித் ஷா போன் செய்து பேசி இருக்கிறார். தான் கனிமொழிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தாக அமித் ஷா நேற்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அன்று அவர்கள் வேறு என்ன பேசிக்கொண்டனர் என்பது முழுமையாக தெரியவில்லை.

விவாதம்
அமித் ஷா இப்போது திடீரென இந்த போன் கால் பற்றி பேசி இருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நீட் விவகாரத்தில் பாஜகவை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. அதோடு தேசிய அளவிலும் மாநில முதல்வர்கள் கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின் இணைவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. ஸ்டாலின் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில்தான் அமித் ஷாவின் இந்த ஸ்டேட்மென்ட் வந்துள்ளது. இதை திமுகவினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மரியாதை நிமித்தம்
அதே சமயம் இது வெறும் மரியாதை நிமித்தமான போன் காலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் போன் செய்யப்பட்ட காலகட்டம்தான் விவாதத்திற்கு காரணம். திமுக எம்பிக்கள் அமித் ஷா வீட்டு வாசலில் காத்திருந்த அதே காலகட்டத்தில் இந்த போன் கால் சென்றுள்ளது. இதில் கனிமொழி நீட்டை பற்றி ஏதாவது பேசினாரா, தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் பற்றி பேசினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications