கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில்.. தவறுகள் உள்ளன! மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
சென்னை: மதுரை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவைகளை வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருப்பதாக தமிழக அரசை மத்திய அமைச்சர் விமர்சித்திருக்கிறார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் இது குறித்து கூறுகையில், "மெட்ரோ கொள்கை 2017ஐ அரசியல்மயமாக்கி, சர்ச்சையை உருவாக்குவது தவறு. மெட்ரோ ரயில் போன்ற பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மக்களுக்கு அதிகபட்ச பலனை வழங்குவதை உறுதி செய்வதே இந்தக் கொள்கையின் நோக்கம்.

மெட்ரோல் ரயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ஆனால், சென்னையில் 119 கி.மீ. நீளமுள்ள மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி ₹63,246 கோடி செலவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அவர் மறந்துவிட்டார். இதுவரை ஒப்புதலளிக்கப்பட்ட மிகப்பெரிய மெட்ரோ திட்டம் இது.
நவ.14ம் தேதி தமிழக தலைமைச் செயலாளருக்கு தனது அமைச்சகம் இது குறித்து கடிதம் அனுப்பியிருந்தது. அந்த கடிதத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகள் குறிப்பிட்டிருந்தன. இக்கடிதத்தில்தான் விரிவான திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தன. சென்னை மெட்ரோவை விட கோயம்புத்தூரின் வழித்தட நீளம் குறைவாக இருக்கிறது. ஆனால், போக்குவரத்து கணிப்புகள் சென்னையை விட அதிகமாக இருக்கிறது. இது மேலோட்டமாகப் பார்த்தால் தவறாகத் தோன்றுகிறது.
சாலைப் போக்குவரத்திற்கும் மெட்ரோவிற்கும் இடையே பயண நீளங்கள் மற்றும் வேக வேறுபாடுகள், மக்களை மெட்ரோ ரயிலை நோக்கி நகர்த்தும் எனும் கருத்தை நான் ஆதரிக்கவில்லை. மட்டுமல்லாது கோயம்புத்தூர் மெட்ரோவின் விரிவான திட்ட அறிக்கைகளின்படி, ஏழு மெட்ரோ ரயில் நிலைய இடங்களில் போதிய வழித்தடம் இல்லை. போதுமான மக்கள் தொகை இல்லை. மதுரையிலும் இதே பிரச்சனைதான். அதாவது இங்குள்ள மக்கள்தொகை எண்ணிக்கையானது பேருந்து போக்குவரத்துக்கு ஏற்றதாகவே இருக்கிறது.
பிரதமர் இ-பஸ் சேவை திட்டத்தின் கீழ், பல்வேறு நகரங்களில் 10,000 குளிரூட்டப்பட்ட இ-பேருந்துகளை வழங்க மத்திய அரசு முன்வந்தும், இத்திட்டத்தை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ளவில்லை. இத்திட்டத்தின் கீழ் பேருந்துகள், டெப்போ உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மத்திய நிதி உதவி அளிக்கப்படுகிறது. பலமுறை வற்புறுத்தியும், தமிழக அரசு இதுவரை இத்திட்டத்தில் பங்கேற்கவில்லை" என தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications