சென்னை பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து! ஏன் என்ன நடந்தது?
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் (University of Madras) கிறிஸ்துவத்தை பரப்புவது தொடர்பாக வரும் 14 ம் தேதி சொற்பொழிவு நடத்தும் விவகாரம் சமூகவலைதளங்களில் சர்ச்சையானதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் மாளிகை சார்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் சுப்பிரமணிய ஐயர் அறக்கட்டளை ஆண்டுதோறும் சொற்பொழிவை நடத்தி வருகிறது. அதன்படி 2024- 2025 ஆம் கல்வியாண்டுக்கான சொற்பொழிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவது எப்படி, இந்த மார்க்கம் ஏன் தேவைப்படுகிறது ஆகிய தலைப்புகளில் வரும் மார்ச் 14 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சொற்பொழிவை என்ஜினியரான கே சிவகுமார் வழங்குவதாக சொல்லப்பட்டது.
சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படவிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு துறை தலைவர் சவுந்திரராஜன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த சொற்பொழிவுக்கு கல்வியாளர்கள், பேராசிரியர்கள், வலது சாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.
பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு குறிப்பிட்த மதத்தை பரப்புவது குறித்த சர்ச்சைக்குரிய கருத்தரங்கை நடத்தினால் மாணவர்கள் மத்தியில் மதவெறி வேரூன்றிவிட இந்த நிகழ்ச்சி முன்னுதாரணமாக அமைந்துவிடும் என சமூகவலைதள பக்கங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மேலும் இந்த மத ரீதியிலான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரியும் அதை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த சொற்பொழிவு தொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் மாளிகை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் சர்ச்சையானது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, ஆளுநரின் தனிச் செயலருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சுப்பிரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவை நடத்துவதற்கு பல்கலைக்கழகத்திடம் முறையாக அனுமதி பெறப்படவில்லை.
இதை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அந்த விளக்கக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கிறிஸ்துவ மதம் தொடர்பான சொற்பொழிவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications