நள்ளிரவில் பொதுமக்களை தாக்கிய அமெரிக்க இளைஞர்கள்.. சென்னை ஜெமினி பாலம் அருகே ஷாக் சம்பவம்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மது போதையில் அமெரிக்க இளைஞர்கள் இருவர் பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை தடுக்க வந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்திய அமெரிக்க இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் நள்ளிரவில் நேர கட்டுப்பாட்டை மீறி நடத்தப்படும் பார்களில் ஏற்படும் பிரச்னைகள் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் நேற்றிரவு நுங்கம்பாக்கம் பகுதியில் இரண்டு அமெரிக்க இளைஞர்கள் பொதுமக்களையும், போலீசாரையும் தாக்கியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த மது விருந்தில் பங்கேற்றிருக்கின்றனர்.

அங்கு விருந்தில் பங்கேற்ற மற்றவர்களிடத்தில் வாக்குவாதத்திலும், கைகலப்பிலும் ஈடுபட்டிருக்கின்றனர். இதனையடுத்து அங்கிருந்த பவுன்சர்கள் இந்த இளைஞர்களை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்கள். ஆனாலும் இளைஞர்கள் சமாதானமாகாமல் பவுன்சர்களை சராமாரியாக தாக்கியுள்ளனர். எனவே அங்கிருந்து அவர்களை வெளியே இழுத்து வந்து ஆட்டோ பிடித்து ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த ஆட்டோ ஜெமினி பாலம் அருகே வந்போது ஆட்டோவிலிருந்து இறங்கிய இளைஞர்கள் கண்ணில் படும் பொதுமக்களை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் ஒன்று சேர்ந்து இளைஞர்களை பிடிக்க முயன்றுள்ளனர். இது அப்பகுதியில் ரோந்து பணியிலிருந்த போலீசாருக்கு தெரிய வரவே, அவர்களும் இளைஞர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் இளைஞர்கள் இதற்கு பிடி கொடுக்காமல் ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் விரட்டி சென்று பிடித்தபோது அவர்களை தாக்கிவிட்டு இளைஞர்கள் மீண்டும் ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் ஒருவழியாக பொதுமக்களும் போலீசாரும் சேர்ந்து இளைஞர்கள் இருவரையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல்கட்ட விசாரணையில் ஒருவர் அலெக்ஸ், மற்றொருவர் மெல்காரிடம் என்பது தெரிய வந்திருக்கிறது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து அமெரிக்க தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கைது செய்ய இளைஞர்கள் துரத்தப்பட்டபோது அவர்கள் கீழே விழுந்ததில் சிறிது காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக நேற்றிரவு அனுமதிக்கப்பட்டு பின்னர், காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மது போதையில் இரண்டு அமெரிக்க இளைஞர்கள் பொதுமக்களையும், போலீசாரையும் தாக்கியுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications