காலி மனை பட்டா வாங்கறீங்களா? மூலப்பத்திரம், வில்லங்க சான்றிதழ்.. அடடே இதுல இத்தனை விஷயம் இருக்கா?
சென்னை: சொந்தமாகவே இடம் வாங்க போறீங்களா? காலி மனை பட்டா வாங்குவது? அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தமிழக பத்திரப்பதிவு துறையானது, பொதுமக்களின் நன்மைக்காக எத்தனையோ நன்மைகளை மேற்கொண்டு வருகிறது.. ஆனாலும், போலி பத்திரங்களை பயன்படுத்தி, மோசடிகள் நடப்பது பெருகிவிட்டது.

இந்த மோசடிகளையும் களைவதற்கான முயற்சியில் பதிவுத்துறை ஈடுபட்டு வருகிறது.. சமீபத்தில்கூட ஒரு உத்தரவை பதிவுத்துறை பிறப்பித்திருந்தது.. அதாவது, காலி மனை பத்திரங்கள் பதிய நில புகைப்படம் கட்டாயம் என்று உத்தரவிட்டிருக்கிறது.
காலி மனை: காரணம், தமிழகத்தில், காலி மனை பத்திரங்களை பதிவு செய்வதற்காக, கள ஆய்வு எதுவுமே மேற்கொள்வதில்லை. ஒருசில இடங்களில், காலி மனை என்று குறிப்பிட்டு தாக்கலாகும் பத்திரங்களிலும், கட்டிடங்கள் மறைக்கப்படுவதால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடுகிறது.. அதனால்தான், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்..
அதில், "பத்திரத்தில் கட்டிடம் தொடர்பான விபரங்களை மறைப்பதை தடுக்க, சம்பந்தப்பட்ட நிலத்தை எளிதில் அறியும் வகையில், புவியிட தகவல்கள் மற்றும் தேதியுடன், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, ஆவணத்தில் இணைக்க வேண்டும். இதை அனைத்து ஆவணதாரர்களும், ஆவணம் எழுதுவோரும் அறியும் வகையில் விளம்பரப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவணங்கள்: காலி மனை பத்திரங்கள் பதிவுக்கு வரும்போது, முந்தைய ஆவணங்களில், கதவு எண், மின் இணைப்பு, குடிநீர், வடிகால் இணைப்பு எண், சொத்து வரி எண் குறிப்பிடப்பட்டு இருந்தால், கள ஆய்வு மேற்கொள்வது கட்டாயமாகும்.
முந்தைய ஆவணங்களில் வீட்டுக்கடனுக்காக ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம் பதிவாகி இருந்தாலும், கள ஆய்வு கட்டாயம். முந்தைய ஆவணத்தில் வீடு இருப்பது குறிப்பிடப்பட்டு, அது இப்போது இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், அங்கு கள ஆய்வு செய்வது கட்டாயம்.. அதனால், சம்பந்தப்பட்ட நிலத்தின் புவியிட தகவல்கள், தேதியுடன் புகைப்படம் எடுத்து, களப்பணி அறிக்கையில் இணைக்க வேண்டும்..
தணிக்கைகள்: பத்திரங்கள் தொடர்பான தணிக்கையிலும், இந்த விதிகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா என, பார்க்க வேண்டும்" என்று அதில் தெரிவித்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.. இதுபோன்ற அரசின் அதிரடி நடவடிக்கைகளால், பத்திரப்பதிவுகளில் மோசடி சம்பவங்கள் ஓரளவு குறைந்தும் வருவதை மறுக்க முடியாது.
இதுஒருபுறம் இருந்தாலும், காலி மனை ஏதாவதொன்றை நீங்கள் வாங்க முயற்சிக்கிறீர்களா? அப்படியானால், அதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் தெரியுமா?
வில்லங்கம்: எப்போதுமே, எந்த இடத்தை வாங்க முயன்றாலும், அந்த இடத்திற்கான 30 வருட வில்லங்க சான்றிதழை சரிப்பார்க்க வேண்டும்.. குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இதுவாகும்.
அதாவது, நீங்கள் வாங்கப்போகும் நிலம், யார் வசம் இருந்து கைமாறி வந்தது? நீங்கள் வாங்க நினைக்கும் காலி மனை, வாரிசு பெயரில் இருக்கிறதா அல்லது வேறு யார் பெயரில் இருக்கிறது என்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆலோசனை: அதுமட்டுமல்லாமல், நீங்கள் வாங்கப்போகும் சொத்து, பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களையும் வில்லங்க சான்றிதழில் சரிபார்க்க வேண்டும்.
முக்கியமாக, காலி மனை வாங்கும்போது தாய்ப்பத்திரம், ஒரிஜினல் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.. பிறகு, நீங்கள் வாங்க முயலும், அந்த காலி மனைக்கு சிஎம்டிஏவின் Approval இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.. இதைத்தவிர உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உங்கள் ஊரிலுள்ள கிராம நிர்வாகியின் ஆலோசனையை பெற்று நிலம் வாங்குவது நல்லது.












Click it and Unblock the Notifications