தடுப்பூசி செலுத்தாமலேயே சான்றிதழ் கொடுத்தது எப்படி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலே சிலருக்கு போட்டதாக சான்றிதழ் தரப்பட்டுள்ளதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொழில் நுட்ப பிரச்சினையால் அந்த மாதிரி ஒரு சில நிகழ்வுகள் நடந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்த மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதுதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலேயே சிலருக்கு போட்டதாக சான்றிதழ் தரப்பட்டுள்ளதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொழில் நுட்ப பிரச்சினையால் அந்த மாதிரி ஒரு சில நிகழ்வுகள் நடந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாத மக்கள், இரண்டாம் அலையிலானால் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து மக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தினர்.

பொது மக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் தடுப்பூசி மெகா முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தில் ஏற்கனவே 7 கட்டங்களாக முகாம் நடைபெற்ற நிலையில், இன்று 8-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது.
சென்னை விருகம்பாக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா தடுப்பூசி முகாம் மற்றும் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டம் நல்ல பலனை தந்துள்ளது. இன்றும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 75 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 33 சதவீதம் பேருக்கு 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் 2-ம் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை 70 சதவீதமாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலே சிலருக்கு போட்டதாக சான்றிதழ் தரப்பட்டுள்ளதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொழில் நுட்ப பிரச்சினையால் அந்த மாதிரி ஒரு சில நிகழ்வுகள் நடந்துள்ளன. இனிமேல் தவறுகள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாதிரி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications