மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் ஐக்கியமா? அப்பட்டமான பொய் செய்தி- வைகோ திட்டவட்ட மறுப்பு
சென்னை: மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் இணையப் போவதாக தாம் அறிவித்ததாக பரப்பப்படுவது நூற்றுக்கு நூறு அப்பட்டமான பொய் செய்தி; இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் பல இடங்களில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தேர்தல் முடிந்த பிறகு பொதுக்குழுவில் முக்கியமான முடிவை எடுக்கப் போகிறேன் என்றார். ஆனால் என்ன முடிவு என்பதை தெரிவிக்கவும் முடியாது என ஆவேசப்பட்டார்.
சட்டசபை தேர்தலில் திமுகவின் சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏற்கனவே திமுகதான் ராஜ்யசபா எம்.பி. பதவியை வைகோவுக்கு மீண்டும் கொடுத்தது.

துரை வைகோவுக்கு பதிவு
இதையடுத்து மகன் துரை வையாபுரி என்ற துரை வைகோவை அரசியலில் களமிறக்கினார் வைகோ. துரை வைகோவுக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதனால் மதிமுகவில் பெரும் புகைச்சல் ஏற்பட்டது. மதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேரக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் வைகோவுடன் இணக்கமாக இருப்பதால் திமுக தலைமை அப்படி மதிமுக அதிருப்தியாளர்களை சேர்த்து கொள்ளாது என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

வைகோ பெயரில் பொய் செய்தி
இந்த நிலையில் தாம் அரசியலில் இருந்து விலகுகிறேன்; மதிமுக கலைக்கப்பட்டு விரைவில் திமுகவுடன் இணைக்கப்படும்- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீர் அறிவிப்பு என்ற பெயரில் ஒரு செய்தி கார்டு சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. ஆனால் வைகோ அப்படி ஒரு பேட்டியையோ அறிவிப்பையோ கொடுக்கவில்லை என்பது திட்டவட்டமாக தெரியவந்தது. அதனால் மதிமுகவை கலைப்பதாக அறிவித்ததாக வைகோ கூறினார் என்கிற செய்தி பொய்யானதாகவும் உறுதியானது.

பொய் செய்தி குறித்து புகார்
தற்போது இது தொடர்பாக வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெயரில் சில விஷமிகள் நூற்றுக்கு நூறு அப்பட்டமான ஒரு பொய்யை செய்தியாக்கி இருக்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டு ஆத்திரமுற்ற கழகத் தோழர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாகத்தை விமர்சிப்பது மிகவும் தவறு. பொய் செய்தி குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம்.

அவதூறுகளை நம்ப வேண்டாம்
இதுபோன்ற பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகளைப் பரப்ப நினைப்பவர்களுக்கு நாம் தீனிபோட்டது போல் ஆகிவிடும். எனவே நம்முடைய கழகத் தோழர்கள் இதுகுறித்து எந்த அறிக்கையோ, செய்தியோ வெளியிடக் கூடாது என வைகோ அறிவுறுத்தி இருக்கிறார். வைகோவின் இந்த விளக்கம், மதிமுக தொண்டர்களை கட்டுப்படுத்தக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications