Vairamuthu: கொரியன்களுக்கு ஏன் தொப்பை வருவதில்லை தெரியுமா? கவிதை நடையில் விளக்கிய வைரமுத்து
சென்னை: கொரியன்களுக்கு பெரும்பாலும் தொப்பையிருப்பதில்லை ஏன் என்பது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கவிதை நடையில் கூறியிருப்பதை படிக்கும் போது அது கண் முன்னால் நடப்பது போல் இருக்கிறது.

இதுகுறித்து வைரமுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில்
உலக உணவுக் கடைகள்
பெருகிவிட்டன
மாதம் ஒருநாள் என்னைக்
கொரியன் உணவகம்
கூட்டிச் செல்வார்கள்
மதன் கார்க்கியும் கபிலனும்
கூழாங்கல் அளவில்
இனிப்பில் ஊறிய
உருளைக்கிழங்குகள்,
தித்திக்கும் காரத்தில்
முட்டைக்கோஸ்
மற்றும் கொரியன் கீரைகள்
பசியூட்டிகளாய்ப் பரிமாறப்படும்.
பிறகு சூப்
கடல் பாசியில் அவித்த
கோழி இறைச்சியின் சாறுவரும்.
அது
நவம்பர் மாதத்தில்
போர்த்துப் படுக்கும்
போர்வைச் சூட்டின்
பதத்தில் இருக்கும்
பருகி முடிக்கையில்
வெள்ளை தேவதையாய்
ஒரு கொரியப் பெண் வருவாள்;
மேஜையில் அடுப்பு மூட்டுவாள்;
தீ வளர்த்து
வெண்பன்றியின் விலாக்கறி அறுப்பாள்
அடங்கி எரியும் தீக்கொழுந்தில்
கறியின் வெண்ணிறம்
பொன்னிறம் ஆகும்வரை வாட்டுவாள்;
பின்னர் அதைச்
சிறு துண்டுகள் செய்வாள்
இனி உண்ணத் தொடங்குவது
நம் வேலை
லெட்யூஸ் இலைகளுக்குள்
பன்றிக் கறியைச் சுருட்டவேண்டும்.
அதில் வெங்காயத் தழைகள்;
இங்கிலிஷ் இலைகள்;
பூண்டுத் துண்டுகள்;
மற்றும் நாவுக்கேற்ற பச்சைமிளகாய்
அனைத்தையும் திணித்து
பீடாபோல் உருட்ட வேண்டும்
வாயின் ஓர் ஓரம் செருகிக்
கடைவாய்ப் பற்களால்
கடித்துண்ண வேண்டும்
கொரியன் உணவு முறையுள்ள
இதுவும் ஒன்று
இங்கே தானிய உணவு
தள்ளி வைக்கப்பட்டிருப்பதால்
எவ்வளவு உண்டாலும்
இரைப்பை நிறைவதில்லை
அதனால்தான்
கொரியன்களுக்குப்
பெரும்பாலும் தொப்பையில்லை
புரிகிறதா தோழர்களே!
வயிற்றை அடைக்காமல்
சாப்பிடுகிறவன் பாக்கியவான்
வயிற்றில் இருக்கும்
மிச்சத்தில்தான்
சேமிக்கப்படுகிறது
அவரவர் ஆயுள் இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications